சூர்யா, திரிஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த மே 15ஆம் தேதி வெளியான “கருப்பு” திரைப்படம் உலகளவில் ரூ.258 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.163 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், “கருப்பு” திரைப்படம் உருவானபோது நடந்த சுவாரசிய தகவல்களை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “உண்மையில் ‘கருப்பு’ படம் விஜய் சாருக்காகவே எழுதப்பட்டது. அரசியலுக்கு வருவதற்கு முன், இது அவருடைய கடைசி படமாக இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அரசியல் ஈடுபாடுகள் மற்றும் கடைசி படம் தொடர்பான சில காரணங்களால் அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதற்காக விஜய்யுடன் இரண்டு முதல் மூன்று முறை வரை கதை விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. எனினும், கதையைக் கேட்ட பிறகு விஜய் பகிர்ந்த கருத்துகளும், எழுப்பிய கேள்விகளும் திரைக்கதையை மேலும் வலுப்படுத்த உதவின. அதற்கான நன்றிக்குறியாகவே படத்தின் ஆரம்ப கிரெடிட்ஸில் விஜய்க்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘கங்குவா’ படத்திற்காக சூர்யா மூன்று ஆண்டுகள் செலவிட்டார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதற்கு பிறகு வெறும் 10 நாட்களிலேயே அவர் என்னுடைய செட்டுக்கு வந்துவிட்டார். அவரது எனர்ஜி அப்படியே இருந்தது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தரப்பின் பரிந்துரையின்படி நடிகர் சூர்யாவிடம் கதை சொல்லப்பட்டதாகவும், கதை கேட்ட குறுகிய நேரத்திலேயே அவர் இப்படத்தில் நடிக்க சம்மதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கருப்பு’ படத்திற்காக நாங்கள் சூர்யாவுடன் வெறும் 51 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம். குறைந்த நாட்களில் ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அது தற்போது நிறைவேறியுள்ளது,” என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
‘கருப்பு’ திரைப்படம் குறித்த இந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.
