அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் கழக அமைப்பு செயலாளரான வெள்ளமண்டி நடராஜன், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். அவருடன் அவரது மகன் ஜவஹர்லால் நேரு மற்றும் ஆதரவாளர்களும் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸி ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர், அதிமுகவிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் நிலையில், தற்போது திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெள்ளமண்டி நடராஜனும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
நேற்று இரவு தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புஸி ஆனந்தை சந்தித்த வெள்ளமண்டி நடராஜன், தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருடன் அவரது மகன் ஜவஹர்லால் நேருவும் கட்சியில் இணைந்துள்ளார்.
வெள்ளமண்டி நடராஜன் ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவர். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்து, பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இந்நிலையில், தேர்தலுக்கு பின்னர் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மேலும், திருச்சியில் அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகளும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சில முக்கிய அதிமுக நிர்வாகிகளும் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
