https://republictn.com/

காலி மது பாட்டல்களை திரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 170 டாஸ்மாக் மதுபானக் கடைகளை அடைத்து டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணியளவில், சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள சந்தியூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பணியாளர்கள் தரப்பில், காலி மது பாட்டல்களை திரும்பப் பெற தனியார் நிறுவனத்தை உடனடியாக நியமித்தால்தான் கடைகளை திறப்போம் என தெரிவித்தனர். அதன்பின்னரும் அவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

இது குறித்து டாஸ்மாக் பணியாளர் சங்க கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கூறுகையில், 2003ஆம் ஆண்டு முதல் கடந்த 23 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிற தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், மது பாட்டில்கள் கையாளும் போது ஏற்படும் உடைப்புக்காக 2 சதவீத ஹேண்ட்லிங் சார்ஜ் வழங்க வேண்டும் என்றும், காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்காக தனியாரிடம் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்த பணியை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் பணியிலிருந்து டாஸ்மாக் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை கடையடைப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago