https://republictn.com/

ஃபேஸ்புக் காதல், கணவனின் பேராசை, மனைவியின் விபரீத பிளான் என அரங்கேறியுள்ள அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தன் காதலனுடன் சேர்ந்து, கணவனைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, சடலத்தை ரயில் தண்டவாளப் புதரில் வீசிய மனைவியின் நெஞ்சை பதறவைக்கும் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வினோத் லிம்கா. இவரது மனைவி பூனம். வறுமையிலும் அமைதியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், ஃபேஸ்புக் ஒரு புயலாக நுழைந்தது. சமூக வலைத்தளம் மூலமாக பூனமிற்கு சுகத் டோபடோ என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒருகட்டத்தில், பூனம் கணவனைத் தவிக்கவிட்டு காதலனுடன் ஓடிப் போனார். ஆனால், 15 நாட்களிலேயே மீண்டும் கணவன் வீட்டிற்குத் திரும்பினார். இங்குதான் கதையின் முதல் திருப்புமுனை ஆரம்பமானது.

வீட்டிற்குத் திரும்பிய பூனம், கணவனுடன் வாழ விரும்பவில்லை. மாறாக அவனைக் கொலை செய்யக் காதலனுடன் சேர்ந்து ஒரு மாஸ்டர் பிளான் போட்டார். அதன்படி, பிலாஸ்பூரின் சிர்கிட்டி பகுதியில் முகாமிட்டிருந்த காதலன் சுகத் டோபடோ, வினோத்திற்கு ஒரு விசித்திரமான போன் கால் செய்தார். அதில், “உன் மனைவியை நான் நிரந்தரமாக வைத்துக் கொள்கிறேன். அதற்குப் பதிலாக உனக்கு ₹10,000 பணம் தருகிறேன்” என்று பேரம் பேசினார். வறுமையில் இருந்த வினோத், அந்தப் பேராசையில் சலுகைக்கு ஒப்புக்கொண்டு, மே 19 அன்று மனைவி பூனமுடன் பிலாஸ்பூருக்குப் புறப்பட்டார். ஆனால், அதுவே தனது கடைசிப் பயணம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

பிலாஸ்பூர் இரயில் தண்டவாளம் அருகே வினோத் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காதலன் சுகத், அவனது நண்பன் இந்தால் மஞ்சி, பூனம் ஆகியோர் சேர்ந்து, வினோத்தின் கழுத்தை நெரித்தனர். பின்னர், கத்தியால் தொண்டையை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, சடலத்தைச் சேற்றிலும் புதரிலும் வீசிவிட்டு ஜார்க்கண்டிற்கு எஸ்கேப் ஆயினர்.

குற்றத்தை மறைத்துவிட்டு பூனம் மட்டும் தனியாகத் தன் கிராமத்திற்குத் திரும்பியபோதுதான் கதையின் அடுத்த பெரிய டுவிஸ்ட் அரங்கேறியது. “மகன் எங்கே?” என்று மாமியார் குடும்பத்தினர் கேட்டபோது, “அவர் பிலாஸ்பூரிலேயே வேலைக்குத் தங்கிவிட்டார்” என்று பூனம் மழுப்பினார். ஆனால், பூனமின் பதற்றமான குணம், சந்தேகத்திற்குரிய நடத்தை மாமியாருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் பூனமின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, காதலனுடன் அவர் நள்ளிரவில் பேசிய பல மணிநேர ரகசியங்கள் அம்பலமானது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பூனம் உடைந்துபோய், கணவனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் காட்டிய இடத்தில் இருந்து வினோத்தின் அழுகிய சடலத்தை மீட்ட சிர்கிட்டி போலீசார், பூனமைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள காதலன் சுகத் மற்றும் அவனது கூட்டாளிகளைப் பிடிக்கத் தனிப்படை ஜார்க்கண்டிற்கு விரைந்துள்ளது. பணத்திற்காக மனைவியையே விற்கத் துணிந்த கணவனும், காதலுக்காகக் கணவனைக் கொன்ற மனைவியும் சேர்ந்து நிகழ்த்திய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 hours ago at 10 hours ago