https://republictn.com/

சென்னையிலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் ஏசியா பயணிகள் விமானத்தில் மது போதையால் ஏற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து 186 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 196 பேர் அந்த விமானத்தில் ஏறியிருந்தனர். விமானம் ஓடுபாதையில் புறப்பட தயாராக இருந்த நிலையில், அதில் பயணம் செய்த மலேசிய குடியுரிமை பெற்ற இந்தியர்களான நந்தகுமார் மற்றும் பிரசாத் ஆகியோர் மது போதையில் ஒருவருக்கொருவர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்துக்குள் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இது சக பயணிகளுக்கு பெரும் இடையூறாக அமைந்தது.

உடனடியாக விமான பணிப்பெண்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விமானக் குழுவினர் சென்னை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, விமானத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் அழைக்கப்பட்டு உடனடியாக உள்ளே நுழைந்து இரு பயணிகளையும் வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து கீழே இறக்கினர். பின்னர் அவர்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. அவர்களது உடைமைகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டன.

இதையடுத்து, சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு, அதிகாலை 1 மணியளவில் அந்த விமானம் 184 பயணிகளுடன் கோலாலம்பூருக்கு புறப்பட்டது.

விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நந்தகுமார் மற்றும் பிரசாத் இருவரும் பின்னர் விமான நிலைய பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஆரம்ப கட்ட விசாரணையில், இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்கு சென்று அங்கு நிரந்தரமாக தங்கி குடியுரிமை பெற்றவர்கள் என்றும், தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் உறவினர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த நிலையில், மீண்டும் மலேசியா திரும்பும் போது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago