https://republictn.com/

​மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிமுறைகள் மற்றும் உத்தரவுகள் நாட்டுக்கானவை என்பதால், தமிழக அரசு அதனைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

​கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மையக்குழு கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது இதில் பாஜக மாநில நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த நிர்வாகியான தமிழிசை சவுந்திரராஜன் கூறும் போது :

எந்த தீய சக்தியை எதிர்த்து போராடுகிறோம் என்று சொன்னார்களோ, அந்த தீய சக்தியோடு இருந்தவர்களோடு சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் புறவாசல் வழியாக இன்று அமைச்சராக இருக்கிறார்கள். காங்கிரஸ் பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சி. ஊழல் அதிகமாக செய்த கட்சி. மக்களுக்கு எந்த நலத்திட்டமும் செய்யாத கட்சி. அதனால் மாற்றங்களை கொண்டு வருவோம் என கூறிய தமிழக வெற்றி கழகம் காங்கிரசை வைத்துக் கொண்டு எப்படி செய்வார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும்.

இளைஞர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு தேசபக்தி பாடலைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாங்கள் இதைப் பின்பற்ற மாட்டோம் என்று தமிழக அமைச்சர்கள் பொத்தாம் பொதுவாகக் கருத்துச் சொல்ல முடியாது. மத்திய அரசு வழங்கும் வழிமுறைகள் அவர்களுக்குச் சொந்தமானவை அல்ல, அவை நாட்டுக்கான வழிமுறைகள். எனவே அதை அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது சனாதனம், வந்தே மாதரம் ஆகியவற்றை வைத்து அரசியல் செய்தார்கள். இனிமேலும் தமிழகத்தில் அத்தகைய உணர்ச்சிப்பூர்வமான அரசியலை முன்னெடுக்காமல், ஆக்கப்பூர்வமான அரசியலை நோக்கிச் செல்ல வேண்டும். இந்த அரசியல் சூழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் பலியாகிவிடக் கூடாது. குறிப்பாக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் தனித்தன்மைக்கு அழுத்தம் கொடுக்காதவாறு தவெக விழிப்புடன் இருக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் ராகுல் காந்திக்கு அதுகுறித்த புரிதல் இல்லை. பிரதமரின் அரபு நாட்டுப் பயணங்கள் நாட்டின் பொருளாதாரச் சூழலுக்காகவும், பெட்ரோல் இருப்பை நமக்காகச் சேமித்து வைப்பதற்காகவுமே அமைந்தன. அதேபோல் நெதர்லாந்து சென்ற பிரதமர், 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செப்புத் தகடுகளைத் தமிழ் உணர்வோடு மீட்டு வருகிறார். பிரதமரின் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் பின்னாலும் மக்கள் நலனும், தேச நலனும் கலந்த ஒரு திட்டம் இருக்கிறது. அவர் ராகுல் காந்தியைப் போலச் சுற்றுலா செல்வதில்லை.

தமிழகத்தின் புதிய அமைச்சர்கள் அனைவரும் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை முதலமைச்சர் விஜய் முறையாக வழிகாட்ட வேண்டும் கல்வி அமைச்சர் பிஎம் ஸ்ரீ (PM SHRI) திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை பொத்தாம் பொதுவாக எங்கள் கொள்கை முடிவுக்கு எதிரானது என நிராகரிக்கக் கூடாது. கடந்த கால ஆட்சியைப் போல மத்திய அரசுடன் கொள்கை மோதலில் ஈடுபடாமல், மக்கள் நலனுக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் புதிய அமைச்சர்கள் ஈடுபட வேண்டும்.

​பாஜகவின் புதிய நிர்வாகிகள் மாற்றம் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், நிர்வாகிகள் அனைவரும் மேலும் உற்சாகத்துடன் பணியாற்றுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதே தற்போதைய கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago