Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பஞ்சாபில் காணாமல் போன இளம் பாடகி, ஆறு நாட்களுக்கு பிறகு கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் காதலன், நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து இளம்பெண்ணை கடத்தி கொலை செய்துவிட்டு கனடாவுக்கு தப்பிச் சென்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனின் நிர்பந்தத்திற்கு இணங்க பாடுவதையே நிறுத்திய பஞ்சாபி பாடகி, பின்னர் காதலை முறித்ததால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்பதைக் குடும்பமே மறைத்ததை அறிந்து விலகிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே உள்ள கூபா கிராமத்தைச் சேர்ந்தவர் இந்தர் கௌர். 29 வயதான இவர், பஞ்சாபி பாடகியாக பலராலும் அறியப்பட்டவர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த இவர், தனது பாடல்கள் மற்றும் பயணங்கள் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றிருந்தார்.

இதையும் படியுங்க  "அப்பாவைத் தொடர்ந்து மகன் என்ட்ரி… ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!"

இந்த நிலையில், கனடாவில் வசித்து வந்த சுக்வீந்தர் சிங் என்ற நபர், இன்ஸ்டாகிராம் மூலம் இந்தர் கௌருடன் பழகியுள்ளார். தொடக்கத்தில் நட்பாக இருந்த உறவு, பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 13ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், இந்தர் கௌர் தனது காரில் மளிகைக் கடைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மறுநாள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், காணாமல் போய் ஆறு நாட்களுக்கு பிறகு, கூபா கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீலோ கால்வாயில், அழுகிய நிலையில் இந்தர் கௌரின் சடலம் மீட்கப்பட்டது. அருகில் ரத்தக்கறை படிந்த நிலையில் அவரது காரும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சுக்வீந்தர் சிங் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் பின்னர் இந்தர் கௌருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  திரையுலகில் பெருஞ்சோகம்: அடையாறு ஆற்றில் குதித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

ஆனால் தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்தி வந்த சுக்வீந்தர் சிங், அதற்கு இந்தர் கௌர் மறுப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கனடாவில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு வந்த சுக்வீந்தர் சிங், பின்னர் பஞ்சாப் வந்து தனது நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டு காத்திருந்துள்ளார்.

கடந்த 13ஆம் தேதி, காரில் தனியாக சென்ற இந்தர் கௌரை துப்பாக்கி முனையில் கடத்தி, காருக்குள்ளேயே கொலை செய்துவிட்டு உடலை கால்வாயில் வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அதே இரவு நேபாளம் வழியாக கனடாவுக்கு தப்பிச் சென்றதும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சுக்வீந்தர் சிங்கின் தந்தை பிரீதம் சிங் மற்றும் நண்பர் கரம்ஜித் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கனடாவில் பதுங்கியுள்ள சுக்வீந்தர் சிங்கை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வர தூதரக ரீதியிலான நடவடிக்கைகளையும் பஞ்சாப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  “குஷ்பு மகள் அவந்திகா காதல் திருமணம் உறுதி! வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா?

திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் காதலியை, கனடாவில் இருந்து இந்தியா வந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம், பஞ்சாப் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago