Kanimozhi

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக வெளியான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தவெக அரசு, முதலமைச்சர் விஜய் மீது திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையின்போது மக்கள் ஒருபுறம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மறுபுறம் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, “நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஒருபுறம் மக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிக்கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் இளம்பெண், சமயபுரத்தில் இரண்டு சிறார்கள், திருச்சியில் ஐடி ஊழியர் எனப் பல்வேறு மாவட்டங்களில் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Kanimozhi

தொடர்ந்து, “இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் வாய் திறக்கப்போவதில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்க  விஜய் முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கல்..! ‘செக்’ வைத்த ஆளுநர்..! எரியுதடி மாலா..

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய கனிமொழி, “மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று முதலமைச்சர் நினைத்துவிடக் கூடாது” என்றும் எச்சரித்துள்ளார்.

தீபாவளி நாளில் தேனி, சென்னை, திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் தொடர் கொலைச் சம்பவங்கள் மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *