Vijay

மாநில சுயாட்சி குழுவை கலைத்த தவெக அரசு – இது கலைப்பு இல்லை, காட்டிக்கொடுப்பு!

தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஒடுக்குவதற்காகவே, திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் சதி இது.

2025 ஏப்ரல் 17-ல், சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. அசோக் வர்தன் ஷெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மு. நாகநாதன் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு வெறும் குழு இல்லை. தமிழ்நாட்டின் தன்மானத்தின் குரல். ஆளுநர் அதிகாரம், நிதிப் பகிர்வு, சட்டமன்ற உரிமை, ஒன்றிய – மாநில உறவுகள் என அத்தனையையும் அலசி, 2026 பிப்ரவரி 16-ல் முதல் பாக அறிக்கையை கொடுத்து இந்தியா முழுக்க அதிர வைத்த குழு அது.

அந்தக் குழுவைத்தான், 2026 நவம்பர் 6 அன்று வெளியான ஒரே ஒரு அரசாணையில் முதல்வர் ஜோசப் விஜய் தவெக அரசு தூக்கி எறிந்திருக்கிறது.

அரசாணையில் சொல்லப்பட்ட காரணம் – அப்பட்டமான பொய்! “இந்தக் குழு சட்டப்பூர்வமான அமைப்பு இல்லை. இதன் பணிகள் மாநில சட்ட ஆணையத்தின் பணிகளோடு ஒன்றிப் போகிறது. அதனால் கலைக்கிறோம். ஆவணங்களை சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்”

இதையும் படியுங்க  ஆளுங்கட்சியை முந்திய எதிர்க்கட்சி… இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து மாஸ் காட்டும் மு.க.ஸ்டாலின்!

இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை தெரியுமா? சர்க்காரியா கமிஷன் சட்டப்பூர்வ அமைப்பா? புஞ்சி கமிஷன் சட்டப்பூர்வ அமைப்பா? இல்லை. அப்படியென்றால் அந்த கமிஷன்களின் அறிக்கைகளும் செல்லாதா? இந்தியாவின் கூட்டாட்சி வரலாற்றையே மாற்றிய அந்த கமிஷன்களை இதே லாஜிக்கில் கலைத்திருப்பார்களா?

அதைவிட பெரிய கேள்வி – மாநில சட்ட ஆணையமும் சட்டப்பூர்வ அமைப்பு இல்லை. அப்புறம் ஒரு சட்டப்பூர்வமற்ற அமைப்பை கலைத்துவிட்டு, இன்னொரு சட்டப்பூர்வமற்ற அமைப்பிடம் கொடுப்பது எந்த வகை நியாயம்?

இது மாற்றம் இல்லை. மாநில சுயாட்சி பேச்சை மெதுவாக மூடுவதற்கான முதல் அடி.

இதனால் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?

1. டெல்லியை கேள்வி கேட்க இருந்த ஆயுதம் பறிபோனது: மாநில உரிமை பேசுவதற்கு நமக்கு ஒரு அறிவார்ந்த, நீதித்துறை சார்ந்த ஆயுதம் இருந்தது. குரியன் ஜோசப் குழுவின் அறிக்கையை வைத்துத்தான், நிதிப் பகிர்வில் நடக்கும் அநீதியையும், ஆளுநர் மூலம் நடக்கும் அதிகார மீறலையும் நாம் தட்டிக் கேட்க முடிந்தது. அந்த ஆயுதத்தை இப்போது தவெக அரசே கழற்றி வைத்துவிட்டது.

2. மாநில உரிமைப் போராட்டம் நீர்த்துப் போகும்: சட்ட ஆணையம் என்பது பொதுவான சட்டத் திருத்தங்களை பார்க்கும் அமைப்பு. அதற்கு மாநில சுயாட்சி போன்ற அரசியல் அழுத்தம் கொடுக்கும் வேலையை செய்ய முடியாது. குழுவின் ஆவணங்கள் அங்கே போய் தூங்கத்தான் போகிறது. இது திட்டமிட்டு கோப்புகளை முடக்கும் வேலை.

இதையும் படியுங்க  வாயைத் திறந்தாலே பொய்… டம்மி முதலமைச்சரா விஜய்? பரந்தாமன் அதிரடி சரவெடி!

3. வரலாற்றை திரிக்கும் வேலைக்கு வழிவிடுதல்: இன்னொரு பக்கம் பள்ளி, கல்லூரி, நூலகங்களில் போலி / திரிக்கப்பட்ட வரலாற்றுப் புத்தகங்கள் புகுத்தப்படுவதாக குற்றச்சாட்டு வைரலாகிறது. வரலாற்றை மாற்றி எழுதினால், மாநில உரிமை பேசும் அடுத்த தலைமுறையின் சிந்தனையையே மழுங்கடித்துவிடலாம். ஒரு பக்கம் வரலாற்றை அழிப்பது, இன்னொரு பக்கம் வரலாற்று உரிமைக்காக போராடிய குழுவை கலைப்பது – இது தற்செயல் இல்லை. இது ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறிய தவெக அரசு! உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த முடிவு தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. டெல்லியில் எழுதிக் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்.

மாநில சுயாட்சி பேசினால் டெல்லிக்கு பிடிக்காது. டெல்லிக்கு பிடிக்காததை தமிழ்நாட்டில் வைத்திருக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு அரசு, தமிழ்நாட்டு அரசாக இருக்க முடியுமா?

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல இது மாநில உரிமைகள் மீதான தாக்குதல். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி சொன்னது போல இது தவறான முடிவு மட்டுமல்ல, துரோகமான முடிவு.

இதையும் படியுங்க  “இடைத்தேர்தலில் CM Vijay-க்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்” – அன்புமணி எச்சரிக்கை

தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுப் போட்டது, டெல்லிக்கு சிக்னல் கொடுப்பதற்காகவா? இல்லை, டெல்லியை எதிர்த்து நிற்பதற்காகவா?

குழுவை கலைத்ததால் மாநில உரிமை குரல் அடங்கிவிடும் என்று தவெக அரசு நினைத்தால், அது மிகப்பெரிய தவறு. குழு கலைக்கப்படலாம். ஆனால் குழு எழுப்பிய கேள்விகள் கலைக்கப்பட முடியாது.

நிதிப் பகிர்வில் எங்கள் பங்கு எங்கே? ஆளுநர் அதிகாரத்திற்கு எல்லை எங்கே? சட்டமன்ற உரிமைக்கு மரியாதை எங்கே?

இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், கேள்வி கேட்ட குழுவையே கலைத்தது தான் தவெக அரசின் உண்மை முகம்

மு.க.ஸ்டாலின் கண்டனம் – மாநில உரிமைகளை அடகுவைத்து  திரையரங்கு உரிமைகளுக்கு  அனுமதி  எனக் குறிப்பிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார் 

மாநில சுயாட்சி மற்றும் அதிகாரச் சமத்துவத்திற்கு இந்தக் குழு கலைப்பு ஒரு ‘பேரிழப்பு’ என்று அவர் தனது எக்ஸ் (வலைதளம்) பக்கத்தில் சு. வெங்கடேசன் எம்பி  கண்டன பதிவிட்டுள்ளார்

இது கலைப்பு இல்லை. டெல்லிக்கு காட்டிய விசுவாசம். தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *