பல்கேரியாவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இலியானா யோடோவா (Iliana Iotova), அந்நாட்டின் வரலாற்றிலேயே மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 57.6 சதவீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இடைக்காலப் பிரதமர் ஆண்ட்ரே கியூரோவ் தலைமையிலான வேட்பாளர் அணி 39.5 சதவீத வாக்குகளைப் பெற்றது.
62 வயதான இலியானா யோடோவா, அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஊடகத் துறையில் பணியாற்றியவர். 1990 முதல் 1997ஆம் ஆண்டு வரை பல்கேரிய தேசியத் தொலைக்காட்சியில் (BNT) செய்தியாளராகவும், செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
பின்னர் 1997ஆம் ஆண்டு பல்கேரிய சோசலிஸ்ட் கட்சியின் செய்திப் பிரிவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 2005 முதல் 2007 வரை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2007 முதல் 2017 வரை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் (MEP) பணியாற்றினார்.
2017ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ரூமென் ராதேவுடன் இணைந்து பல்கேரியாவின் துணை அதிபராகப் பொறுப்பேற்றார். 2021ஆம் ஆண்டு இருவரும் இரண்டாவது முறையாக அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2026 ஜனவரி 19ஆம் தேதி அப்போதைய அதிபர் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜனவரி 23ஆம் தேதி இலியானா யோடோவா நாட்டின் பொறுப்பு அதிபராகப் பொறுப்பேற்றார். தற்போது அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ளார்.

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில் எந்த வேட்பாளர் அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், நவம்பர் 1ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இலியானா யோடோவா மற்றும் கிரில் வால்சேவ் அடங்கிய வேட்பாளர் அணி 57.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆண்ட்ரே கியூரோவ் மற்றும் ஜார்ஜி காண்டேவ் அடங்கிய எதிரணி 39.5 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதன் மூலம் இலியானா யோடோவா வெற்றி உறுதியானது.
பல்கேரியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான அவரது நிலைப்பாடு இந்தத் தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. குறிப்பாக, ரஷ்யா – உக்ரைன் போரில் பல்கேரியா தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்குவதற்கு இலியானா யோடோவா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
ஆயுத உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதை விட, பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு. இதற்காக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கையை அவர் வலியுறுத்தி வருகிறார்.
ஐரோப்பிய யூனியன் (EU) மற்றும் நேட்டோ (NATO) அமைப்புகளில் உறுப்பினராக உள்ள பல்கேரியாவின் அதிபராக, உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதை எதிர்க்கும் நிலைப்பாட்டைக் கொண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் பல்கேரியாவின் அடுத்தகட்ட வெளியுறவுக் கொள்கை நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இலியானாவின் நிலைப்பாடு ரஷ்யாவுக்குச் சாதகமான அரசியல் சூழலை உருவாக்கக்கூடும் என சில அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பல்கேரியாவின் தற்போதைய பிரதமர் ரூமென் ராதேவும் இலியானா யோடோவாவும் நீண்ட காலமாக அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட்டு வந்தவர்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளாக ரூமென் ராதேவ் அதிபராகவும், இலியானா யோடோவா துணை அதிபராகவும் இணைந்து பணியாற்றினர்.
ரூமென் ராதேவ் அதிபர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இலியானா பொறுப்பு அதிபரானார். தற்போது இருவரும் நாட்டின் பிரதமர் மற்றும் அதிபர் ஆகிய முக்கியப் பொறுப்புகளில் இருப்பதால், பல்கேரியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்கேரியாவில் பிரதமர் நாட்டின் அன்றாட நிர்வாகப் பொறுப்புகளைக் கவனிக்கும் நிலையில், அதிபர் நாட்டின் அரசியலமைப்புச் தலைவராகவும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் செயல்படுகிறார். எனவே, ஒரே அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட தலைவர்கள் இந்த இரு முக்கியப் பதவிகளிலும் இருப்பது நாட்டின் அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை நகர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பல்கேரியாவில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமின்மை, ஊழல் குறித்த புகார்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் ஆளும் அரசியல் கூட்டணிகள் மீது அதிருப்தி கொண்டிருந்த சூழலில் இந்தத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
பல்கேரியாவின் அரசியலில் பெண்களின் பங்களிப்புக்கு இலியானா யோடோவாவின் வெற்றி முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவர், இதற்கு முன்பே 2017 முதல் 2026 ஜனவரி வரை சுமார் ஒன்பது ஆண்டுகள் அந்நாட்டின் முதல் பெண் துணை அதிபராகப் பணியாற்றியுள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு தொலைக்காட்சியில் செய்திகளை வாசித்தவர், இன்று நாட்டின் மிக உயரிய பதவியை அடைந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
