Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

TVK

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வட்டத்திற்குட்பட்ட சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகம்… அங்கு இருப்பது வெறும் காகிதக் கட்டுகள் அல்ல. ஒரு கிராமத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஆவணங்கள், வரிப்பணம், திட்டப்பணிகளின் கணக்கு அடங்கிய இடம் அது. அப்படிப்பட்ட அரசு அலுவலகத்துக்குள், ஊராட்சி செயலாளர் இல்லாத நேரத்தில் புகுந்து, ‘திடீர் கூட்டம்’ நடத்தி, கிராமப் பதிவேடுகளைக் கையாடியதாக அப்பகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடந்தது என்ன?

தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் முனுசாமி, ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் பிரகாசம், ஊராட்சி செயலாளர் புருஷோத்தமன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர், சின்ன வேப்பம்பட்டு அலுவலகத்தைத் திறந்து கூட்டம் நடத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கிராமப் பதிவேடுகளை எடுத்துப் பார்வையிட்டதாகவும் குற்றச்சாட்டு வலுக்கிறது.

இதைக் கேள்விப்பட்டு திரண்ட பொதுமக்கள், முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகளை முற்றுகையிட்டனர். “கிராமப் பதிவேடுகளைப் பார்க்க அனுமதி கொடுத்தது யார்?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்ப, வாக்குவாதம் முற்றியது. நிலைமை மோசமாவதை உணர்ந்த தவெக நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இது சாதாரண கூட்டம் அல்ல… அப்பட்டமான அத்துமீறல்!

ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளர் என்பது கட்சி அமைப்பு ரீதியான பதவி. அது அரசாங்கப் பதவி அல்ல. அவருக்கு அரசு அலுவலகத்தைத் திறக்கவோ, அரசு ஆவணங்களைப் பார்வையிடவோ எந்தச் சட்ட அதிகாரமும் கிடையாது.

இதையும் படியுங்க  "120 CCTV கேமராக்கள்.. பைக்கில் வந்த சடலம்! கிணத்துக்கடவு மர்மக் கொலை வழக்கில் சிக்கிய தந்தை - மகன்!"

* தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன்படி, ஊராட்சி அலுவலகத்தின் சாவியும், பதிவேடுகளும் ஊராட்சி செயலாளர் மற்றும் தலைவரின் பொறுப்பில் இருக்கும். ஊராட்சி செயலாளர் இல்லாத நேரத்தில் சாவியைப் பெற்றுத் திறந்தது முதல் தவறு. அந்தச் சாவியைக் கொடுத்தது யார்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

* கிராமப் பதிவேடுகளைப் பார்வையிட்டது. இவை அரசின் முக்கிய ஆவணங்கள். பிறப்பு – இறப்பு பதிவு, வரி வசூல், திட்டப் பணிகள் எனப் பல முக்கியத் தகவல்கள் அதில் இருக்கும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ்கூட முறையாக விண்ணப்பித்துத்தான் பெற முடியும். ஒரு கட்சி நிர்வாகி நேரடியாக எடுத்துப் பார்ப்பது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல… அப்பட்டமான சட்டவிரோதம்.

சாவி யார் பொறுப்பில்?

ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரின் கூட்டுக் கட்டுப்பாட்டில் ஊராட்சி அலுவலகம் செயல்படுகிறது. ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், தற்போது சாவி ஊராட்சி செயலாளரின் பொறுப்பில் உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒப்புதல், ஊராட்சி செயலாளரின் அனுமதி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை அப்படியிருக்குமா பட்சத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளரே கதவைத் திறந்துவிட்டிருந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயுமா? என்கின்றனர் 

இதையும் படியுங்க  204-வது அவதாரத் திருநாள் - திருவருட்பிரகாச வள்ளலார்

• அரசு அலுவலகத்தைத் திறக்க இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? • பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட்டதா? பக்கங்கள் கிழிக்கப்பட்டனவா? தகவல்கள் திருடப்பட்டனவா? • சாவியைக் கொடுத்த ஊழியர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை? • கட்சிப் பதவி என்றால் அரசு அலுவலகம் இவர்களின் சொந்தச் சொத்தா? 

“அரசியல் கட்சிகள் மக்கள் பணி செய்யலாம். ஆனால், அரசு அலுவலகத்தையே கட்சி அலுவலகமாக மாற்ற நினைப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இச்சம்பவம் தொடர்பாக ஊராட்சி நிர்வாகமும், ஜோலார்பேட்டை போலீஸாரும் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்தக் கைதும் இல்லை… எந்த இடைநீக்கமும் இல்லை… எந்தக் கண்டன அறிக்கையும் இல்லை.

இது விசாரணையா… இல்லை விசாரணை என்ற பெயரில் காலம் கடத்தும் நாடகமா?

தரப்பு விளக்கம் என்ன?

“என்ன சொல்கிறார் தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் முனுசாமி”… கட்சி பணிக்காக அந்த பகுதிக்கு சென்றேன் அப்போது நாற்காலி இல்லாததால் ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தேன் இதை அப்பகுதி திமுகவினர் பெரிது படுத்திவிட்டார்கள் என்றார்.

“சர்ச்சை குறித்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் (கிராம ஊராட்சி) இடம் கேட்டதற்கு” … ஊராட்சி அலுவலகம் திறந்து இருக்கும் போது அந்த நபர் சென்று கணிணி ஆப்ரேட்டரிடம் பேசி இருக்கார் இது சம்பந்தமாக ஊராட்சி செயலாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருக்கிறோம் என்றார் 

இதையும் படியுங்க  Popularity from influencers, speculative fiction articles, and

இந்தச் சம்பவம் சாதாரணமானது அல்ல. இது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைக்கும் செயல். அரசு அலுவலகத்தின் புனிதத்தைக் கெடுத்து, அரசு ஆவணங்களைக் கையாடியவர்களாக கூறப்படுகிறது ? இதை யாராக இருந்தாலும்…  மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். 

சாவியைக் கொடுத்த ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ‌பொதுமக்கள் சொல்வதுபோல் பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட்டதா ? என்பதை ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட வேண்டும். . தவெக தலைமை, இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். 

அரசியல் கட்சிகள் மக்களுக்குச் சேவை செய்ய வந்தவை… அரசு அலுவலகங்களை ஆக்கிரமிக்க வந்தவை அல்ல. இந்த உண்மையை உணராதவர்கள் மீது, சட்டம் தன் கடமையைச் செய்தே ஆக வேண்டும்.

முறையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சின்ன வேப்பம்பட்டு மக்களின் ஒருமித்த கோரிக்கை.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago