வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து, விஜய் தலைமையிலான தவெக தன்னுடைய கட்சி அமைப்பை மாநிலம் முழுவதும் மிகத் தீவிரமாகப் பலப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலும் புதிய நிர்வாகிகள் நியமனம், சார்பு அணிகள் உருவாக்கம் என தவெக சுறுசுறுப்பாகக் களம் இறங்கியுள்ளது.
மறுபுறம், எதிர்கட்சியான திமுகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உட்கட்சித் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நிர்வாக வசதிக்காக 110 மாவட்டங்கள் வரை பிரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட செயலாளர்களைக் கண்காணிக்கக் குழு
ஒன்றியம், நகரம் மற்றும் பகுதி கழகங்களைப் பிரிப்பதற்காகத் தலைமை சில கண்டிப்பான நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்றும், மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு தேர்தல் பார்வையாளர்களை திமுக தலைமை நியமித்துள்ளது.

ஆனால், கள நிலவரமோ வேறுவிதமாக உள்ளது. பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களும், தலைமையால் அனுப்பப்பட்ட பார்வையாளர்களும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் சென்று ‘செம்ம அண்டர்ஸ்டாண்டிங்’ உடன் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, பழைய மாவட்ட செயலாளர்கள் தங்களின் சுய விருப்பத்திற்கும், செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கும் ஏதுவாக ஒன்றிய, நகர அமைப்புகளைத் தங்கள் வசதிக்கு ஏற்பப் பிரித்துக் கொண்டு வருகிறார்கள்.
உதயநிதியின் கனவுக்கு ஆபத்து?
திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில், “மாவட்ட செயலாளர்களில் 60% முதல் 70% வரை புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்.
ஆனால், உள்ளூர் மாவட்ட செயலாளர்களும் பார்வையாளர்களும் போட்டுக்கொள்ளும் ரகசிய ‘டீலிங்’ காரணமாக, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் உதயநிதியின் ஆசை நனவாக முடியாத சூழல் நிலவுகிறது.
அறிவாலயத்திற்கு பறந்த வெடி கடிதம்
இந்த உட்கட்சி மோதலுக்கு சாட்சியாக, விழுப்புரம் வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி மாவட்டச் செயலாளர் கூட்டேரிப்பட்டு அன்சாரி, தலைமையால் பார்வையாளராக நியமிக்கப்பட்ட மாணவரணி மாநிலச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன், வீரமணிக்கு ஒரு காரசாரமான கடிதத்தை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் “தலைமையின் உத்தரவை மீறி, தனிநபருக்கு சாதகமாக (செஞ்சி மஸ்தான்) செயல்பட்டு வருகிறீர்கள். மயிலம் ஒன்றியத்தை வடக்கு, தெற்கு, மத்திய என மூன்றாகப் பிரித்துள்ளீர்கள். ஒரு ஒன்றியத்தில் 35,258 வாக்காளர்கள், இரண்டாவதில் 32,524 வாக்காளர்கள், மூன்றாவதாகப் பிரிக்கப்பட்ட ஒன்றியத்தில் வெறும் 24,757 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
ஒரு ஒன்றியத்தில் 30,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தால் மட்டுமே அதை இரண்டாகப் பிரிக்க வேண்டும் எனத் தலைமை உத்தரவிட்டிருந்த நிலையில், விதிகளை மீறி தனிநபர்களுக்கு சாதகமாகப் பாகப்பிரிவினை செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பார்வையாளராகிய நீங்களும் துணை போயுள்ளீர்கள்” எனக் காரசாரமாகக் குற்றம்சாட்டி, அந்த லெட்டரின் நகலை அறிவாலயத்திற்கும் தட்டிவிட்டுள்ளார் அன்சாரி.
உடன்பிறப்புகளின் ஆதங்கம்
அன்சாரி மட்டுமன்றி, கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் இதேபோன்ற புகார்களை எழுப்பி வருகின்றனர். “கட்சியை நவீனப்படுத்தி, புதிய இரத்த பாய்ச்ச தலைமை என்னதான் திட்டமிட்டு கட்டுப்பாடுகளை விதித்தாலும், உள்ளூர் மட்டத்தில் இருப்பவர்கள் பழையபடியே தங்களுக்குள் டீலிங் போட்டுக்கொண்டு செயல்படுகிறார்கள். இவர்களைத் திருத்தவே முடியாது” என உண்மையிலேயே உழைக்கும் உடன்பிறப்புகள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
