உலக நாடுகளுக்கு இடையிலான போர் இனி நிலத்திலும் நீரிலும் மட்டுமல்லாமல் ஆழ்கடலுக்கு அடியில் உள்ள கண்ணுக்குத் தெரியாத கேபிள்களுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தின் இதயத் துடிப்பாக கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஏற்கனவே மூடி வைத்துள்ள ஈரான், தற்போது உலகையே அச்சுறுத்தும் புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த பாதையின் வழியாக ஆழ்கடலில் செல்லும் இணையம் மற்றும் நிதி பரிமாற்றங்களுக்கான கேபிள்களை குறிவைத்து ஈரான் விடுத்துள்ள மிரட்டல் உலக பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் ஜலசந்திக்கு அடியில் செல்லும் கேபிள்களை பயன்படுத்துவதற்காக கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் இனி ஈரானுக்கு உரிமைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் இணைய டிராபிக் துண்டிக்கப்படும் என்றும் ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆழ்கடல் கேபிள்கள் ஏன் இவ்வளவு முக்கியம் என்றால், உலகளாவிய இணைய டிராபிக்கில் சுமார் 99 சதவீதம் இந்த இடையறா கடல் கேபிள்கள் மூலமாகவே கடத்தப்படுகின்றன.
குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளை ஐரோப்பா மற்றும் ஆசியாவுடன் இணைக்கும் முக்கிய நரம்பு மண்டலமாக இந்த ஹோர்முஸ் ஜலசந்தி பகுதி விளங்குகிறது.
சவுதி மற்றும் அமீரகம் போன்ற நாடுகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், ஈரானின் இந்த நடவடிக்கை அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேபிள்கள் சேதமடைந்தால் இணைய வேகம் குறைவது முதல் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் நிதி பரிமாற்றங்கள் முற்றிலுமாக முடங்கும் வரை மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மேலும் கடுமையாக்கியுள்ளார். ஈரானுக்கான நேரம் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளில் அந்நாடு பிடிவாதம் காட்டுவதாகவும், அந்நாட்டில் எஞ்சியுள்ள ராணுவ இலக்குகளை முற்றிலும் அழிக்க தயங்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்கான திட்டங்களை ஏற்கனவே நிராகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ராணுவ தாக்குதல்களுக்கான ஆலோசனைகளை மேற்கொள்ள தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் நாளை மறுதினம் முக்கிய கூட்டம் நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டார்லிங் போன்ற செயற்கைக்கோள் இணைய வசதிகள் இருந்தாலும், அவை ஆழ்கடல் கேபிள்களுக்கு மாற்றாக அமைய முடியாது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த பதற்றம் தற்போது டிஜிட்டல் உலகையும் ஆட்டம் காணச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆழ்கடல் கேபிள்களை ஒரு போர் கருவியாக மாற்றும் நிலை ஏற்பட்டால், அது நவீன நாகரிகத்தின் அடிப்படை தேவையான டிஜிட்டல் இணைப்பையே முடக்கிவிடும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
அமெரிக்கா தனது ராணுவ வலிமையை பயன்படுத்தி ஈரானை கட்டுப்படுத்துமா அல்லது உலகளாவிய இணைய சேவை மிகப்பெரிய முடக்கத்தை சந்திக்குமா என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. டிரம்ப் குறிப்பிட்ட “டிக்கிங் கிளாக்” எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.
