கடின காலத்துக்கு தயாராக வேண்டும் என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வங் அண்மையில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
அந்த உரையில், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான போர் நிலைமைகள் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாகவும், இதனால் உலக நாடுகள் அனைத்தும் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் போன்ற சிறிய தீவு நாடுகளும் இதிலிருந்து விதிவிலக்கு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த கடின காலத்தைக் கடந்து செல்ல முடியும் என்றும், அதற்கான திட்டங்கள் அரசிடம் உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒன்றாக மீண்டெழுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் உலகளாவிய விலை உயர்வால் அந்நிய செலவாணி அதிகரிக்கிறது என்றும், எனவே எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது நமது பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமையல் எண்ணெய் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 2026 ஏப்ரல் மாதத்தில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் 3.88 சதவீதமாக இருந்த இந்த விகிதம் ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இது மிக உயர்ந்த நிலை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வு பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக FMCG எனப்படும் அன்றாட நுகர்வோர் பொருட்கள் துறையில் உடனடி தாக்கம் ஏற்படும் எனவும், உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகன எரிபொருள் செலவு அதிகரிப்பதால் டூ வீலர், கார் பயன்பாடு, பொதுப் போக்குவரத்து, ஆட்டோ, வாடகை கார் மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை உருவாகும் எனவும் கூறப்படுகிறது. இதன் தாக்கம் பால், காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் பிரதிபலிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமப்புறங்களில் இந்த தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் எனவும், விவசாயத்தில் டீசல் பயன்பாடு அதிகமாக இருப்பதால் உற்பத்தி செலவு உயரும் என்றும் கூறப்படுகிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சில மாநிலங்களில் அரசு வாகன பயன்பாடு குறைக்கப்பட்டதாகவும், சில இடங்களில் Work from home நடைமுறை அமல்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகமாக பாதிக்கும் என்றும், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும் நிலை உருவாகும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த சூழலில், மத்திய மற்றும் மாநில அரசுகள் வரி குறைப்புகள் மூலம் சுமையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசியல் ரீதியாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில், பொதுமக்கள் எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும், பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. ரேஷன் உதவித்தொகை மற்றும் மாதாந்திர நிதி உதவிகளை எரிபொருள் செலவுக்காக பயன்படுத்தலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
மொத்தத்தில், இந்த எரிபொருள் விலை உயர்வு நிலை விரைவில் கட்டுக்குள் வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
