கடந்த 30 ஆண்டுகளாக ஜப்பானையே தனது தாயகமாகக் கருதி வாழ்ந்து வந்த ஒரு இந்தியத் தொழிலதிபர், அந்நாட்டின் கடுமையான புதிய குடியேற்றச் சட்டங்கள் தனது 18 ஆண்டுகால உணவகத்தை மூட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ஜப்பானிய அதிகாரிகளால் விசா நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ள விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மனிஷ் குமார் என்பவர் ஜப்பானின் சைதாமா மாகாணத்தில் கடந்த 18 ஆண்டுகளாக வெற்றிகரமாக இந்திய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில், தனது ‘வணிக மேலாளர் விசா’வை புதுப்பிப்பதற்காக ஜப்பானின் குடிவரவு சேவைகள் முகமையிடம் அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்நாட்டின் கடுமையான புதிய விதிகளின் கீழ் அவரது விண்ணப்பம் அதிரடியாக நிராகரிக்கப்பட்டது.
டோக்கியோவில் நடைபெற்ற போராட்டப் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மனிஷ் குமார், இந்த முடிவால் தான் முற்றிலுமாக உடைந்து போயுள்ளதாகக் கண்ணீர்மல்கக் கூறினார்.
“இரண்டு வாரங்களுக்கு முன்பு, என்னை என் சொந்த நாடான இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுமாறு அதிகாரிகள் கூறிவிட்டனர். என் குழந்தைகள் ஜப்பானில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுக்கு ஜப்பானிய மொழி மட்டுமே தெரியும்; அவர்களின் நண்பர்கள் அனைவரும் ஜப்பானியர்கள். இப்போது திடீரென எங்களை இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லச் சொன்னால் நான் என்ன செய்வேன்? எங்கே போவேன்?” என கதறுகிறார் மனிஷ் குமார்
அதிரடியாக மாறிய விதிகள்
ஜப்பானில் நீண்ட கால வசிப்பிட உரிமையைப் பெறுவதற்காக, பலர் இந்த ‘வணிக மேலாளர் விசா’ முறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தடுப்பதற்காகவும், உண்மையான பெரிய வணிகங்களை மட்டுமே ஊக்குவிக்கவும் ஜப்பானிய அரசு முடிவு செய்தது. இதன்படி, கடந்த அக்டோபர் 2025-ல் வணிக விசா நடைமுறைகளில் ஜப்பான் அரசு அதிரடி மாற்றங்களையும், கடுமையான விதிகளையும் அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, சிறு வெளிநாட்டு வணிக உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, புதிய விதிகள் வந்த பிறகு விசா விண்ணப்பங்கள் 96 சதவீதம் சரிந்துள்ளன. முன்பு மாதத்திற்குச் சராசரியாக 1,700 ஆக இருந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, தற்போது வெறும் 70 ஆகக் குறைந்துள்ளது என ‘ஜப்பான் டைம்ஸ்’ இதழ் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலதிபர்களை முடக்கும் 5 புதிய நிபந்தனைகளை ஜப்பான் விதித்துள்ளது. முன்பு வணிக விசா பெற குறைந்தபட்ச முதலீட்டுத் தேவை 5 மில்லியன் யென் (சுமார் ரூ. 30 லட்சம்) ஆக இருந்தது. ஆனால், புதிய விதிகளின்படி இது 6 மடங்கு உயர்த்தப்பட்டு 30 மில்லியன் யென் (சுமார் ரூ. 2 கோடி) ஆக மாற்றப்பட்டுள்ளது. இது சிறு வணிகர்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இப்போது குறைந்தபட்சம் ஒரு முழு நேர உள்ளூர் பணியாளரையாவது கட்டாயம் பணியமர்த்த வேண்டும். முன்னதாக, முதலீட்டுத் தேவை பூர்த்தி செய்யப்பட்டால் பணியாளர்களைச் சேர்ப்பது விருப்பத்தேர்வாக மட்டுமே இருந்தது.
வணிகம் செய்வோர் அல்லது அவர்களின் முழு நேரப் பணியாளர் ஒருவர், ஜப்பானிய மொழித் திறன் தேர்வில் பொதுவாக N2 அளவிலான உயர்தர மொழித் திறனை வெளிப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் மேலாண்மைத் துறையில் முறையான அனுபவத்தையோ, அது தொடர்பான தகுதிகளையோ பெற்றிருப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்குவதற்கான திட்டங்களுக்கு இப்போது தொழில்முறைச் சான்றிதழ் தேவைப்படுகிறது. மேலும், அதிகாரிகள் வரிப் பதிவுகள், அலுவலகத்தின் நம்பகத்தன்மையை நேரில் சோதிக்கத் தொடங்கியுள்ளனர். வீடுகளில் இருந்து இயங்கும் அலுவலகங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளைத் தடுக்க இந்தச் சீர்திருத்தங்கள் அவசியம் என்று ஜப்பானிய அரசாங்கம் வாதிட்டாலும், மனிஷ் குமார் போன்ற சட்டப்பூர்வமாக, நேர்மையாகப் பல வருடங்கள் சிறு வணிகம் செய்து வரும் வெளிநாட்டுத் தொழில்முனைவோர் இந்த ஒடுக்குமுறையால் தேவையின்றி பாதிக்கப்படுவதாகச் சமூக ஆர்வலர்களும் விமர்சகர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
முதலீட்டையும், உழைப்பையும் நம்பி ஜப்பானை நம்பி வந்த சிறு வணிகர்களின் எதிர்காலம், இந்த விசா விதிகளால் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
