தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை செலுத்தும் வசதிக்காக ‘ஈபி ஆட்டோ பே’ (EB Auto Pay) என்ற புதிய தானியங்கி கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார நுகர்வோரின் வங்கி கணக்கிலிருந்து கட்டணத் தொகை தானாகவே பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்ட நாளிலிருந்து 20 நாட்களுக்குள் நுகர்வோர் மின்கட்டணத்தை செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் நிலையில், அந்த தாமத அபராதங்களை தவிர்க்கும் வகையில் இந்த புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஈபி ஆட்டோ பே வசதியை பயன்படுத்த விரும்பும் நுகர்வோர், மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அதற்கான விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், தங்களது மின்னிணைப்பு எண், மொபைல் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்து இந்த சேவையை செயல்படுத்த வேண்டும்.
இதனை செயல்படுத்திய பின், மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்ட 10வது நாளில் நுகர்வோரின் வங்கி கணக்கிலிருந்து மின்கட்டண தொகை தானாகவே பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எளிமையான மற்றும் நவீன வசதியை அனைத்து மின்நுகர்வோரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
