https://republictn.com/

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வீடு புகுந்து இளைஞர்கள் இருவரை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பரத் மற்றும் சீனு. நண்பர்களான இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வரும் நிலையில், துக்க நிகழ்ச்சிகளில் கானா பாடல்கள் பாடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு ஒரகடம் அருகே நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கானா பாடல் பாடுவதற்காக அவர்கள் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர், படப்பை அருகே உள்ள அம்மனம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் நண்பர் லோகேஷின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர். அப்போது, வீட்டில் லோகேஷின் தந்தை மோகன், தாய் சங்கீதா மற்றும் தங்கை ஹரிணி ஆகியோர் இருந்துள்ளனர்.

இந்த சூழலில், இன்று பிற்பகல் மூன்று இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம கும்பல் திடீரென வீட்டிற்குள் நுழைந்து பரத் மற்றும் சீனுவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற லோகேஷ் மற்றும் அவரது தந்தை மோகனையும் அந்த கும்பல் கத்தியால் தாக்கியுள்ளது.

இதனால் அச்சமடைந்த லோகேஷ் குடும்பத்தினர் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளனர். தொடர்ந்து பரத் மற்றும் சீனுவை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த தாக்குதலில் பரத் மற்றும் சீனு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரத் மற்றும் சீனு கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம கும்பலின் பின்னணி என்ன? என்பது குறித்து மணிமங்கலம் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட இருவர்மீதும் எந்தவித குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago