நடிகர் ரவி மோகன் குடும்ப விவகாரம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அவரது மாமியார் செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கூறப்பட்ட கருத்துகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், நான் அழ மாட்டேன், எமோஷனல் ஆக மாட்டேன். ஏனெனில் என் பிள்ளைகளை பார்க்கவே விடாமல் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறு என அவர் தெரிவித்தார்.
மேலும், திருமணம் பிளாக்மெயில் செய்து நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பேசப்பட்டு வருவது குறித்து, அதற்கு எந்த உண்மையும் இல்லை என அவர் மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே அவதூறு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இன்று மேடையில் மீண்டும் அதே பழைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பும் மறைமுகமாக பல அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால், இது நீதிமன்றத்தில் இருப்பதால் நான் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை,” என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது குடும்பத்தில் உள்ள 16 வயது மகன் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நிலையில் இருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையால் அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்தார். “குழந்தைகள் தேவையற்ற மன அழுத்தத்தில் இருக்கின்றனர். இதை மேலும் அதிகரிக்க நான் விரும்பவில்லை,” என அவர் கூறினார்.
மேலும், தனது பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்கிறேன் என்றும், அவர்களின் நலனுக்காகவே பல முடிவுகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“எனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்கப்படும். தேவையான ஆதாரங்களுடன் எதிர்காலத்தில் விளக்கம் அளிக்கப்படும்,” எனவும் அவர் கூறினார்.
தனியார் வங்கி கணக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள், மருத்துவ செலவுகள் மற்றும் குடும்ப விவகாரங்கள் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகளும் தவறானவை என அவர் மறுப்பு தெரிவித்தார்.
சைபர் தாக்குதல் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். “இது தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்படும். தவறான தகவல்கள் பரப்பியவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்,” எனவும் அவர் கூறினார்.
இறுதியாக, “தமிழ்நாட்டில் ஒரு பெண்ணுக்கு அநியாயம் நடந்தால் அனைவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டுமே இதில் தவறாக தொடர்புபடுத்தப்படுகின்றனர் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது. நீதிமன்றமே இதற்கான முடிவை வழங்கும், என அவர் தெரிவித்தார்.
