முதல்வர் விஜய் பதவி ஏற்றதிலிருந்து அவர் பயன்படுத்தி வரும் வாகனங்கள் குறித்து ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அவரது வாகனப் பயன்பாடு தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
முதல்வர் விஜய் பதவி ஏற்றதிலிருந்து, தனது கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா நிறுவனத்திற்கு சொந்தமான லேண்ட் ரோவர் டிபெண்டர் ரக வாகனத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் இதே ரக வாகனத்தை பயன்படுத்தியுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா நிறுவனத்திற்கு சொந்தமான லேண்ட் க்ரூசர் வாகனத்தையும் அவர் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி, அதுவும் விமர்சனத்துக்குள்ளானது. இவ்வாறு தனியார் நிறுவன வாகனங்களை முதல்வர் விஜய் பயன்படுத்தியதால் சர்ச்சை தொடர்ந்த நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் அரசு மற்றும் தனிப்பட்ட பயன்பாடுகளுக்கு தனியார் நிறுவன வாகனங்களை பயன்படுத்துவது ஆதாய முரண்பாடு மற்றும் விதிமீறல் என எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தற்போது முதல்வர் விஜய் தனது சொந்த வாகனமான வெல்ஃபயர் (Vellfire) காரை பயன்படுத்தி வருகிறார். இந்த வாகனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.1.50 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமர்சனங்களை தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தவெக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
