வாட்ஸ்அப்பில் மறைந்திருந்த கள்ளக்காதல், ஒரு வயதுக் குழந்தையின் எதிர்காலத்தையும், ஒரு இளம்பெண்ணின் உயிரையும் ஒரே அடியில் பறித்துவிட்டது! கணவனின் துரோகத்தை தட்டிக்கேட்ட குற்றத்திற்காகத் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட மனைவியின் சாவில் மர்மம் இருப்பதாகப் பெற்றோர் கொந்தளித்துள்ளனர்.
திருப்பத்தூர் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகள் கிருத்திகா (25). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன வெங்காயப்பள்ளியைச் சேர்ந்த சென்ராயன் மகன் அமித்குமார் (33) என்பவருக்கும், கிருத்திகாவுக்கும் கோலாகலமாகத் திருமணம் நடந்திருக்கிறது. இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது.

சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த குடும்பத்தில் புயலைக் கிளப்பியது அமித்குமாரின் செல்போன். கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கிருத்திகாவுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. கணவரின் போனை எடுத்துப் பார்த்தவர் அதிர்ந்து போயிருக்கிறார். ‘ராஜா’ என்ற பெயரில் சேவ் செய்யப்பட்டிருந்தது ஒரு பெண்ணின் நம்பர். அந்த எண்ணில் இருந்த வாட்ஸ் அப் ஷாட்டைத் திறந்து பார்த்த கிருத்திகாவுக்கு தலை சுற்றியிருக்கிறது. வாட்ஸ்அப்பில் அந்தப் பெண்ணுடன் அமித்குமார் ஆபாசமாக சேட்டிங் செய்து வந்தது அம்பலமாகி இருக்கிறது.
“ஒரு வயசு புள்ள இருக்கு… இப்படி பண்றியே”ன்னு கேட்டிருக்காங்க. அதிலிருந்து வீட்டில் அடிக்கடி தகராறு நடந்திருக்கு” என்கிறார்கள் அக்கம் பக்கத்தினர். இதேபோல் நேற்றும் கணவன்-மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. மனமுடைந்த கிருத்திகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீஸார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் உடலைப் பார்த்து மார்க்கெட் வளாகமே அதிரும்படி கதறி அழுதனர் பெற்றோர்.
அப்போது எதிர்பாராத திருப்பம்… மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருளின் காரைப் பார்த்ததும், கிருத்திகாவின் குடும்பத்தினர் காரின் முன்பாக ஓடி வந்து மறித்தனர். “என் மகள் சாவுல மர்மம் இருக்கு சார்… அவளை அடிச்சுக் கொன்னுட்டாங்க… சம்பந்தி குடும்பத்தைக் கைது பண்ணுங்க சார்” என கையெடுத்துக் கும்பிட்டு, தரையில் விழுந்து புரண்டு கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

இதைப் பார்த்த ஆட்சியர் காரிலிருந்து இறங்கி, “உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக உங்களுக்கு நீதி கிடைக்கும்” என உறுதியளித்த பிறகே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்குள் பெண் தற்கொலை செய்துகொண்டதால், திருப்பத்தூர் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார். போலீஸ் தரப்பில், “விசாரணை தீவிரமாக நடக்கிறது. கைப்பற்றப்பட்ட செல்போன் ஆய்வுக்கு அனுப்பப்படும்” என்கிறார்கள்.
ஆபாச சேட்டிங்கால் ஒரு குடும்பமே சிதைந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
