திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான சி. ஜோசப் விஜய், தான் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலியிடத்துக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், செப்டம்பர் 29, 2026 அன்று இந்திய தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஏற்கனவே தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் விராலிமலை ஆகிய 5 தொகுதிகளிலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்குகளில் நீதிமன்றம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 151(A)-ன் கீழ், ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானால் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டதாகவும், அவர்களில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மட்டுமே தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்ட தொகுதியாக இருந்தால் மட்டுமே, தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருப்பது இடைத்தேர்தல் நடத்துவதில் நேரடி தடையாக அமையும் என்ற அடிப்படையிலும் தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது.
இதற்கு எதிராக விஜய் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தேர்தல் வழக்குகள் முடிவடைய பல ஆண்டுகள் கூட ஆகலாம் என்றும், அதுவரை ஒரு மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதியை நீண்ட காலம் காலியாக வைத்திருப்பது பொதுமக்களின் நலனுக்கு எதிரானது என்றும் வாதிடப்பட்டது.

மேலும், இந்த வழக்கை தொடர்ந்த நெல்லையைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரின் மனு பொதுநல வழக்கு அல்ல என்றும், அது தனிநபர் நலனை அடிப்படையாகக் கொண்ட வழக்கு என்றும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுவாக தேர்தல் முடிந்தவுடன் தோல்வியடைந்த வேட்பாளர்கள் தேர்தல் வழக்குகளைத் தொடர்வதாகவும், நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை தொடர்ந்து தள்ளிப்போட்டால், தமிழகத்தில் பல தொகுதிகள் நீண்ட காலம் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படும் என்றும் விஜய் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தொடர்ந்துள்ள தேர்தல் வழக்கிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் ஆணைய விதிகளுக்கு மாறாக, 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை விஜய் தனது பிரசாரத்தில் பயன்படுத்தியதாக அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுக்களுடன் இணைக்கப்பட்ட சொத்து பிரமாணப் பத்திரங்களில் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான முரண்பாடுகள் இருப்பதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது கவனம் செலுத்தி, வருமான வரித்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவில் பெருந்துறை தொகுதி தொடர்பாக முக்கியமான தகவல் இடம்பெற்றுள்ளது. இடைத்தேர்தல் நடத்தக் கோரப்படும் 5 தொகுதிகளில் ஒன்றான பெருந்துறை தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு, கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதியே நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் பெருந்துறை தொகுதி தற்போது அதிகாரப்பூர்வமாக காலியாக அறிவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனினும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நவம்பர் 24-ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால், அதுவரை பெருந்துறை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதனால், தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பை தொடர்ந்து, திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் நாளை என்ன உத்தரவு பிறப்பிக்க உள்ளது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
