சமீபத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர், புட்டபர்த்தியில் அமையவுள்ள 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பட்ட நடுத்தரப் போர் விமானம் (AMCA) பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
‘மேம்பட்ட நடுத்தரப் போர் விமானம்’ (AMCA) தொடர்பான விமானச் சோதனை, ஒருங்கிணைப்பு வளாகம் என்பது, இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ போர் விமானத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கிய பாதுகாப்பு, விண்வெளித் திட்டம். தமிழகத்தில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த அரசு, இந்த பாதுகாப்பு மையத்தை எப்படியாவது தமிழகத்தின் ஓசூருக்கே கொண்டுவர வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது.
இத்திட்டத்திற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கோரியிருந்தபடி, ஓசூர் விமான நிலையத்தின் 3.5 கி.மீ நீள ஓடுபாதையைத் தவிர்த்து, கூடுதலாக 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கவும் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத்திட்டம் தமிழகத்தை விட்டு நழுவிச் செல்ல அனுமதித்தாக, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. சந்திரபாபு நாயுடு டெல்லியில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழகத்திற்கு வரவிருந்த திட்டங்களை ஆந்திரப் பிரதேசத்திற்குத் திசைதிருப்புவதாகக் கூறி அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும், இதற்காகப் புதிய முதல்வரை விஜயைக் குறை கூறுவது நியாயமல்ல.
ஒரு பாதுகாப்புத் திட்டமோ அல்லது வேறு எந்தவொரு திட்டமோ, வெறும் ஒரே வார காலத்தில் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுவிட முடியாது. விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஒரு வாரம் மட்டுமே ஆகியுள்ளது. தமிழகத்தில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திற்கு இத்திட்டத்தை மாற்றும் முடிவு என்பது, ஒரே இரவில் எடுக்கக்கூடிய ஒன்றல்ல. எனவே, அத்தகைய ஒரு முடிவு எடுக்கப்பட்டிருந்தால், அது மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இங்கு கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால், தென் கொரியாவைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமான ‘Hwaseung Enterprises’, தமிழகத்தில் 1,720 கோடி ரூபாய் மதிப்பில் தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக தமிழக அரசுடன் முன்னதாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால், பின்னர் அந்த நிறுவனம் தனது திட்டமிடப்பட்ட முதலீட்டை ஆந்திரப் பிரதேசத்தின் குப்பம் பகுதிக்கு மாற்றிக்கொண்டது. இது, மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.
ஆகவே, AMCA திட்டம் ஆந்திரப் பிரதேசத்திற்குச் சென்றதற்கு விஜயின் நிர்வாகமே காரணம் என்று குறை கூறுவது, வெறும் அரசியல் உள்நோக்கம் கொண்ட விமர்சனம் என்கிறார்கள்.
