Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay Sethupathi

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘மகாராஜா’ திரைப்படம், தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான இப்படம், 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடியது. அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம்புலி, அபிராமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

‘மகாராஜா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்வதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். முன்னணி தயாரிப்பு நிறுவனத்தால் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் திரைப்படமாக ‘மகாராஜா’ மாறியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மகாராஜா’ திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு, சீனாவில் திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் வெளியிடப்பட்டது. அங்கும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், சீன பாக்ஸ் ஆபிஸில் மட்டும் சுமார் 91.65 கோடி ரூபாய் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, முன்னணி ஹாலிவுட் ஏஜென்சி ஒன்று இப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெறுவதற்காகத் தயாரிப்பாளர்களை அணுகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பாராட்டுகளைப் பெற்ற ‘மகாராஜா’, தற்போது ஹாலிவுட் திரையுலகில் ரீமேக் செய்யப்படவிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹாலிவுட் ரீமேக் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு, அதாவது 2027-ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  "இறக்குற வரைக்கும் ரஜினி சார் மாதிரி வாழணும்!" 'பாத்தா' மேடையில் உருகிய விஜய் சேதுபதி!

ஹாலிவுட்டில் பிரபலமான ‘இன்டர்ஸ்டெல்லர்’ (Interstellar) திரைப்படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற, ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் மேத்யூ மெக்கோனாஹே, விஜய் சேதுபதி நடித்த முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

Vijay Sethupathi

இதுகுறித்து படத் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில், “ஹாலிவுட் ஏஜென்சி தற்போது ஒரு முன்னணி ‘A-list’ நட்சத்திரத்தை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் நடிகர்களில் மேத்யூ மெக்கோனாஹேவும் ஒருவராக இருக்கலாம். ஆனால், நடிக்கும் நடிகர்கள் மற்றும் தயாரிக்கும் ஸ்டுடியோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த ஹாலிவுட் ஏஜென்சிதான் வெளியிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் நடிகர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல், படத்தில் அனுராக் காஷ்யப் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் ஹாலிவுட்டில் எந்த நடிகர் நடிக்கப்போகிறார் என்ற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ஹாலிவுட் ரீமேக் குறித்த செய்திகள் ஒருபுறம் இருக்க, ‘மகாராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘மகாராஜா 2’ படத்திற்கான கதையை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தயார் செய்துவிட்டதாகவும், அதற்கு விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்து கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க  "நண்பா ரொம்ப நன்றி..! விஜய் சேதுபதிக்கு திடீரென போன் போட்ட முதலமைச்சர் விஜய்!

முதல் பாகத்தில் ஒரு சாதாரண குப்பைத் தொட்டி (லட்சுமி) காணாமல் போனதை மையமாகக் கொண்டு முழுக் கதையும் நகர்ந்தது. இதனால், ஹாலிவுட் ரீமேக் குறித்த செய்தி வெளியானதும், “அமெரிக்காவில் எந்தப் பொருளைத் தேடுவார்கள்? ஒருவேளை ‘Trash Can’ காணாமல் போனதாகக் கதையை அமைப்பார்களா?” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுவாரசியமாக விவாதித்து, மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஹாலிவுட் ரீமேக் மட்டுமின்றி, பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான் ஏற்கனவே ‘மகாராஜா’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றியதாகவும், விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் தானே நடிக்க ஆர்வம் காட்டியதாகவும் முன்பே தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், அதற்குப் பின்னர் இந்தத் திட்டம் தொடர்பாகப் பெரிய அளவில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே, நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம் ‘மகாராஜா’ படத்தின் தமிழ் பதிப்பை இந்தியில் டப் செய்து வெளியிட்டதாகவும், அது நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்தி திரையரங்கு ரீமேக் திட்டம் தற்காலிகமாகப் பின்னடைவைச் சந்தித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், ஹாலிவுட் ஏஜென்சி முந்திக்கொண்டு ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தி ரீமேக் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

‘மகாராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது, தயாரிப்பாளர்களிடம் வெறும் 20 கோடி ரூபாய் பட்ஜெட் மட்டுமே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கதையின் மீது நம்பிக்கை கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, தனக்கு ஒரு ரூபாய் கூட முன்பணமாக வழங்க வேண்டாம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க  ”லண்டன் ரேஸ் டிராக்கில் அஜித் குமார்: இணையத்தைக் கலக்கும் புதிய வீடியோ!

படம் லாபம் ஈட்டிய பிறகு, லாபத்தில் ஒரு பகுதியைப் (Profit Sharing) பெற்றுக்கொள்வதாகக் கூறி விஜய் சேதுபதி நடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இப்படம் உலகம் முழுவதும் சுமார் 199.20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஹாலிவுட் வரை சென்றிருப்பது விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் வெளியானபோது, தந்தை – மகள் பாசப் பிணைப்பைக் காட்டும் கிளைமாக்ஸ் காட்சிகளில் சீன ரசிகர்கள் திரையரங்குகளிலேயே கண்ணீர் விட்டு அழுத வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

‘Maharaja

‘தங்கல்’ திரைப்படத்திற்குப் பிறகு, சீன ரசிகர்களை இந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாகப் பாதித்த இந்தியத் திரைப்படம் ‘மகாராஜா’ தான் என சீனாவுக்கான இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யு ஜிங் (Yu Jing) பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சஞ்சனா நமீதாஸ், தனது சிறப்பான நடிப்பிற்காகச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அழுத்தமான தந்தை – மகள் பாசப் பிணைப்பு சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்று, இப்படத்தை ஹாலிவுட் வரை கொண்டு சென்றதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் அசாத்தியமான திரைக்கதை பலம் தற்போது உலக அளவில் கவனம் பெற்றிருப்பதாகக் கூறப்படும் நிலையில், ‘மகாராஜா’ திரைப்படத்தின் ஹாலிவுட் ரீமேக் செய்தி ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago