மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள 2.7 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் (Status Quo) என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை, அந்தச் சொத்தில் எந்தவிதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளவோ, சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட மாற்றங்களைச் செய்யவோ கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், இரு தரப்பினரும் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை மத்தியஸ்தராக நியமித்துள்ளது. அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1988-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி, சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடம் இருந்து இந்த 2.7 ஏக்கர் நிலம் நடிகை ஸ்ரீதேவி, அவரது தாய் ராஜேஸ்வரி மற்றும் சகோதரி ஸ்ரீலதா ஆகிய மூவரின் பெயர்களிலும் கூட்டாக வாங்கப்பட்டது. சம்பந்த முதலியாரின் மகன் எம்.சி.சந்திரசேகரனின் வாரிசுகளான எம்.சி.சிவகாமி மற்றும் எம்.சி.நடராஜன் ஆகியோர், தங்களுக்குத் தெரியாமல் நிலம் விற்கப்பட்டதாகவும், அதில் தங்களுக்கும் பங்கு இருப்பதாகவும் கூறி வழக்குத் தொடர்ந்தனர்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரம் என்பதைக் குறிப்பிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கு கால வரம்பு கடந்த நிலையில், 2025-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனை எதிர்த்து சிவகாமி மற்றும் நடராஜன் தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
ஸ்ரீதேவி 2018-ம் ஆண்டு மறைந்த பின்னர், 2023-ம் ஆண்டு வாக்கில் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் சொத்தின் வருவாய் ஆவணங்களையும் பட்டாவையும் தங்களது பெயர்களுக்கு மாற்ற விண்ணப்பித்தனர். அப்போதுதான் தங்களுக்குச் சொந்தமான நிலம் விற்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
சந்திரசேகரனின் வாரிசுகள் தாங்கள்தான் எனக் கூறி அவர்கள் வாரிசுச் சான்றிதழும் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர்கள் தவறான தகவல்களை அளித்து மோசடியாகப் போலி வாரிசுச் சான்றிதழைப் பெற்றுள்ளதாக போனி கபூர் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.
மேலும், மனுதாரர்களின் தாயாருக்கும் சந்திரசேகரனுக்கும் இடையிலானதாகக் கூறப்படும் இரண்டாவது திருமணம் சட்டப்பூர்வமானதா என்பது உள்ளிட்ட சட்டச் சிக்கல்களை உயர் நீதிமன்றம் ஆராய்ந்ததாக, போனி கபூர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.
மனுதாரர்கள் இருவரும் முறையே 1995 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் 18 வயதை அடைந்துவிட்டதாகவும், தங்களுக்குப் பங்கு கோர விரும்பியிருந்தால், 18 வயதை நிறைவு செய்த மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது 1998 அல்லது 2002-ம் ஆண்டுக்குள் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2025-ல் தொடரப்பட்ட வழக்கு சட்டப்படி செல்லாது என்றும் வாதிட்டார்.
இதே மனுதாரர்கள் குடும்பச் சொத்துகளில் ஐந்தில் ஒரு பங்கு கோரி, கடந்த 2007-ம் ஆண்டே சிவில் வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கு அப்போதே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், நிலம் விற்கப்பட்ட பின்னர், சந்திரசேகரன் தனது வாழ்நாளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருமுறைகூட நீதிமன்றத்தை நாடவில்லை என நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரசேகரனின் முதல் திருமணம் மற்றும் உண்மையான வாரிசுகள் குறித்த தகவல்களை மனுதாரர்கள் மறைத்துள்ளதாகவும், அவர்கள் சந்திரசேகரனின் நேரடி முதல்வகுப்பு (Class-1) சட்டபூர்வ வாரிசுகள் அல்ல என்பதால் வழக்குத் தொடர சட்டபூர்வ உரிமை (Locus Standi) இல்லை என்றும் கபூர் தரப்பு வாதிட்டது.
இந்த நிலம் ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு வெறும் சொத்தாக மட்டுமல்லாமல், அவர் சென்னைக்கு வரும்போதெல்லாம் தங்கி மகிழ்ந்த உணர்வுப்பூர்வமான பண்ணை வீடாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு குடும்பத்துடன் தொடர்புடைய பல நினைவுகள் இருப்பதால், அந்த இடத்தைப் பாதுகாப்பதற்காக போனி கபூரும் ஜான்வி கபூரும் சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கீழமை நீதிமன்றம் அசல் ஆதாரங்களை முழுமையாக ஆராயவில்லை என மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், தற்போது Status Quo மற்றும் மத்தியஸ்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
