தமிழ்நாட்டின் ‘புது முதல்வர்’ தளபதி விஜய், ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் நலனுக்காக யோசித்து யோசித்து மண்டையை பிச்சிக்கிறாரோ இல்லையோ, டிராஃபிக் போலீஸ்காரர்கள் பாவத்தைக் குறைப்பதே தன் வாழ்நாளின் லட்சியமாக எடுத்துக்கொண்டார் போலிருக்கிறது!
சட்டமன்றக் கூட்டம் நடந்தாலே போதும்… ‘ஐயோ சிஎம் வர்றாரு, மந்திரி வர்றாரு’னு சென்னையின் மையப்பகுதியில் டிராஃபிக் ஜாமாகி, பொதுமக்கள் கத்தி கதறுவது நம் ‘தளபதி’யின் மெல்லிய இதயத்தைப் பலமாகப் பாதித்துவிட்டது. அதற்கு அவர் கண்டுபிடித்த மாஸ்டர் பிளான் தான் — “தலைமைச் செயலகத்தை தூக்கிட்டு வந்து என் வீட்டுக்கு பக்கத்துல வைங்கப்பா!”
பட்டினப்பாக்கத்தில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தூரத்தில் புதிய தலைமைச் செயலகம் அமையப்போகிறதாம். அதாவது, காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு, லேசாக ஒரு ‘வாக்கிங்’ போனாலே நேரடியாகச் செயலகத்திற்குள் போய்விடலாம்! ‘கன்வாய்’ என்ற பெயரில் 50 கார்களை அணிவகுக்க விட்டு, சைரன் சத்தத்தில் ஊரையே கூச்சல் போட வைக்கும் பழைய வழக்கத்திற்கு ஒரே அடியாக ‘ரெட் கார்டு’ கொடுக்கப் போகிறார் நம்ம முதல்வர்.

டிவிகே (TVK) ஆதரவாளர்களோ ஒரு படி மேலே போய், “இது சிஎம்மோட சோம்பேறித்தனம் இல்லை சார், இதுதான் பியூர் ‘மக்கள் நலன்’! வீட்டுக்கும் ஆபீஸுக்கும் நடுவுல டிராஃபிக்கே இருக்காது. அப்புறம் எப்படி பொதுமக்கள் பாதிக்கப்படுவாங்க?” என்று சயின்டிஃபிக்காக முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனிமேல் கூட்டத்தொடர் நடந்தால், டிராஃபிக் கான்ஸ்டபிள்கள் “சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்க, முதல்வர் நடந்து வர்றாரு!” என்று ஒரே ஒரு பிரம்பை வைத்துக்கொண்டு டிராஃபிக்கை அசால்ட்டாக க்ளியர் செய்துவிடுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களோ, “இனிமே எல்லா மாநில முதல்வர்களும் இதையே ஃபாலோ பண்ணுங்கப்பா! முடிஞ்சா சட்டமன்றத்தையே வீட்டின் ஹாலில் வச்சுட்டா இன்னும் ஈஸி… முதலமைச்சர் நைட்டியோ, லுங்கியோ போட்டுக்கிட்டே நேரடியாகக் கூட்டத்தில் கலந்துக்கலாம்!” என்று ஓட ஓட வைத்து கிண்டல் அடித்து வருகின்றனர்.
எது எப்படியோ… “ஆபீஸுக்கு போக லேட் ஆயிடுச்சு” என்று இனி முதல்வர் பொய் கூட சொல்ல முடியாது என்பதுதான் இதில் இருக்கும் ஒரே ஆபத்து!
