Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் தனது நடமாட்டத்தை மாமனார் கண்காணித்ததால் ஆத்திரமடைந்த மருமகள், கூலிப்படையை வைத்து அவரை 26 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் கான்பூரைச் சேர்ந்த 63 வயதான மருந்துத் தொழிலதிபர் வினீத் மினோச்சா. பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு சொந்தக்காரர் எனக் கூறப்படும் வினீத் மினோச்சாவுக்கு, தனது மருமகள் ஷீலு மினோச்சாவின் நடவடிக்கைகள் மீது தொடர்ந்து அதிருப்தி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, ஷீலுவுக்கு இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வம் இருந்த நிலையில், அதற்கு வினீத் கட்டுப்பாடுகளை விதித்ததாகத் தெரிகிறது.

மேலும், குடும்பச் செலவுகளுக்காக மாமனாரிடம் பணம் கேட்க வேண்டிய நிலை இருந்ததுடன், சிறிய செலவுகளுக்குக் கூட அவர் கட்டுப்பாடுகளை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதோடு, ஷீலுவின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் வீட்டில் பல சிசிடிவி கேமராக்களையும் வினீத் பொருத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் ஆளான ஷீலு, தனது மாமனாரை கொலை செய்யத் திட்டமிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்காக, வினீத் மினோச்சாவின் வீட்டில் முன்பு வேலை செய்த விஷால் கௌதம் என்பவரை ஷீலு அணுகி, தனது மாமனாரை கொலை செய்ய பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. கொலைக்காக 6 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறிய அவர், முன்பணமாக 2 லட்சம் ரூபாயையும் கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டின் போலிச் சாவியையும் விஷாலிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "டெல்லியை கதறவிடும் கரப்பான் பூச்சி படை! '7 நாள் கெடு' விதித்த 2 கோடி இளைஞர்களின் மெகா புரட்சி!

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வினீத் மினோச்சா வீட்டில் இருந்தபோது, விஷால் கௌதமும் அவரது கூட்டாளியும் போலிச் சாவியைப் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது வினீத் மினோச்சாவை தலையணையால் அமுக்கிக் கொன்று, அதை மாரடைப்பு என நம்ப வைப்பதே அவர்களின் ஆரம்பத் திட்டமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால், அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது வினீத் திடீரென விழித்துக் கொண்டதால், திட்டம் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து பயந்துபோன கொலையாளிகள், அவரை கத்தியால் 26 முறை கொடூரமாகக் குத்திக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலை நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில், தன் மீது எந்தவிதமான சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக ஷீலு தனது கணவர் சுப்ரத்துடன் கான்பூரில் உள்ள ‘காஸ்மோசின் லவுஞ்ச்’ என்ற சொகுசு விடுதியில் பார்ட்டியில் கலந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


Republic Tamil

அங்கு கணவருடன் “தும் தோ தோகேபாஸ் ஹோ” என்ற இந்திப் பாடலுக்கு ஜாலியாக நடனமாடியுள்ளார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்க  வழி காட்டிய கூகுள் மேப்.. நடுவழியில் நேர்ந்த விபரீதம்.. நள்ளிரவில் 2 மணி நேரம் திக்.. திக்..!

ஆனால், பார்ட்டியில் நடனமாடிக்கொண்டிருந்த போதே ஷீலு, கூலிப்படையைச் சேர்ந்த முன்னாள் ஊழியர் விஷாலுடன் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த ஒரே இரவில் மட்டும் விஷாலுடன் 14 முறை தொலைபேசியில் பேசியதாகவும், கொலையாளிகளுக்கு வீட்டின் இருப்பிடம், வினீத் எங்கு படுத்திருப்பார், வீட்டிற்குள் எவ்வாறு செல்ல வேண்டும், எப்படி கொலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களைத் தொடர்ந்து வழங்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து ஷீலு தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும், லைவ் டிராக்கிங் மூலம் கண்காணித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, நள்ளிரவு சுமார் 3 மணியளவில் பார்ட்டி முடிந்து கணவர் சுப்ரத்துடன் வீட்டுக்குத் திரும்பிய ஷீலு, மாமனார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து எதுவுமே தெரியாதது போல் கதறி அழுததாகக் கூறப்படுகிறது. போலீசார் வரும் வரை தனது கணவருக்கும், சுற்றியிருந்தவர்களுக்கும் சந்தேகம் வராத வகையில் கண்ணீர் மல்க நாடகமாடியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில், வினீத் மினோச்சா மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாகவும் கூறி விசாரணையைத் திசைதிருப்ப முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அதேபோல், கொலையாளிகள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக தனது செல்போனில் இருந்த வாட்ஸ்அப் தகவல்களையும் ஷீலு உடனடியாக அழித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் அந்த நீக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுத்ததாகவும், அதன் மூலம் ஷீலுவுக்கும் கொலையாளிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு மற்றும் கொலைச் சதித்திட்டம் அம்பலமானதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  "இறுதிச்சடங்கே முடிந்தாச்சு.. 11 நாட்களுக்குப் பின் மண்ணுக்குள் இருந்து உயிருடன் வந்த பாட்டி! உலகையே உலுக்கிய நேபாள மிராக்கிள்!"

தொடர்ந்து நடத்தப்பட்ட சிசிடிவி மற்றும் தொலைபேசி விசாரணையின் அடிப்படையில் போலீசார் கொலையாளிகளைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், விஷால் உள்ளிட்டவர்கள் போலீசாரிடம் சிக்கியதுடன், ஷீலு மினோச்சா கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் வினீத் மினோச்சாவை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஷீலுவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மாமனாரை கூலிப்படையை வைத்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், கொலை நடைபெற்ற பின்னர் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்து உடலைப் பார்த்து கதறி அழுதபடி ஷீலு நாடகமாடியிருப்பது இந்த வழக்கில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஷீலு மினோச்சா உள்ளிட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஷீலுவின் கணவர் சுப்ரத்திற்கும் இந்தக் கொலைச் சதியில் ஏதேனும் தொடர்பு இருந்ததா அல்லது அவருக்கு இந்தத் திட்டம் குறித்து எதுவும் தெரியாதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கண்காணிப்பு தொடர்பான குடும்பப் பிரச்சினை, கூலிப்படையை வைத்து நடத்தப்பட்ட கொலை, கொலை நடந்த நேரத்தில் பார்ட்டியில் நடனமாடிய மருமகள் என இந்தச் சம்பவம் தற்போது உத்தரப் பிரதேசத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago