Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகே இந்த புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமையவுள்ளது.

சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ளது. சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான முறையில் இந்த புதிய வளாகம் உருவாக்கப்பட இருக்கிறது.

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக, சென்னை மயிலாப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் மொத்தம் 25.55 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வசமுள்ள 21.76 ஏக்கர் நிலம், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 0.93 ஏக்கர் நிலம், வருவாய்த் துறைக்குச் சொந்தமான 1.73 ஏக்கர் நிலம் மற்றும் அரசின் வசம் உள்ள வீட்டு வசதி வாரியத்தின் மற்றொரு 1.13 ஏக்கர் நிலம் ஆகியவை அடங்கும்.

இந்த நிலத்தைப் பயன்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகிய துறைகள் ஏற்கனவே ஆட்சேபனை இல்லா சான்றிதழை (NOC) வழங்கியுள்ளன.

முன்னதாக கோயம்பேடு, நந்தம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பட்டினப்பாக்கம் பகுதியை இறுதி செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Republic Tamil

இந்த ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் சுமார் 15 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட கட்டிடமாக அமையவுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளுக்கான நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டும், நவீன தொழில்நுட்ப வசதிகளை எதிர்கொள்ளும் வகையிலும் இந்த வளாகம் வடிவமைக்கப்பட உள்ளது.

இதையும் படியுங்க  அதிமுகவுக்கு விழுந்த மரண அடி..! 4 முன்னாள் அமைச்சர்கள், 7 Ex எம்.எல்.ஏக்கள் அவுட்: ஒட்டுமொத்தமாக அள்ளிய விஜய்..!

புதிய வளாகத்தில் முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் முதன்மை அலுவலகங்கள் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், மேம்பட்ட தீயணைப்புப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பசுமைக் கட்டிட (Green Building) வசதிகளும் இடம்பெற உள்ளன.

புதிய தலைமைச் செயலகக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகளை 3 மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு பொதுப்பணித் துறைக்கு (PWD) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கட்டிடக்கலை ஆலோசனை, ஆரம்பக்கட்ட வடிவமைப்பு மற்றும் இறுதி கட்டிட வரைபடங்களை மேற்பார்வையிட 3 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலகம் இயங்கி வரும் புனித ஜார்ஜ் கோட்டை 1639-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே, அதாவது 1643-ஆம் ஆண்டுக்கு முன்னரே, இந்த கோட்டை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பழமையான வளாகத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வெறும் 4 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. மீதமுள்ள பெரும்பகுதி இந்திய ராணுவம் மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் இருப்பதால், மாநில அரசால் அங்கு எந்தவொரு புதிய விரிவாக்கப் பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதற்கிடையே, புதிய தலைமைச் செயலகத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதி, முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதனால் முதலமைச்சர் மற்றும் முக்கிய அதிகாரிகளின் பயண நேரம் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  செல்வாக்கும், புகழும் கூடியிருக்குமே..! பாஜக பீதியால் பொன்னான வாய்ப்பை தவறவிட்ட விஜய்..!?

கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதிதான் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அறிவிப்பு வெளியான ஒரே வாரத்திற்குள், அதாவது செப்டம்பர் 9-ஆம் தேதியே இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக விதி 110-ன் கீழ் அறிவிக்கப்படும் பல்வேறு திட்டங்களுக்கு அரசாணை வெளியிட நீண்ட காலம் எடுக்கும் நிலையில், இந்தத் திட்டத்திற்கு உடனடியாக இடம் தேர்வு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில், 2010-ஆம் ஆண்டு ஓமந்தூரார் வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் அந்தக் கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

தற்போது மீண்டும் ஒரு பிரம்மாண்டமான புதிய தலைமைச் செயலகத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்தக் கட்டிடத்தின் நிலை என்னவாகும் என்ற சுவாரசியமான விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், இந்தத் திட்டத்தின் அடுத்தகட்டத்தில் முக்கிய சவால்களும் உள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பகுதி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டலமான CRZ அனுமதிகளைப் பெறுவது முக்கியமானதாக உள்ளது. அதேபோல், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிப்பதும் இந்தத் திட்டத்தின் அடுத்தகட்ட முக்கிய நகர்வுகளாக இருக்கும்.

Republic Tamil

தற்போது இயங்கி வரும் புனித ஜார்ஜ் கோட்டையின் பிரதான தலைமைச் செயலகக் கட்டிடம் வெறும் 2.07 லட்சம் சதுர அடி பரப்பளவு மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், பட்டினப்பாக்கத்தில் அமையவிருக்கும் புதிய வளாகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது. அதாவது, தற்போதைய கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகக் கட்டிடத்தை விட சுமார் 10 மடங்கு கூடுதல் பரப்பளவில் இந்த புதிய வளாகம் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.

இதையும் படியுங்க  "பெண்களின் ஆடையை விமர்சிக்க நீங்க யார்?" – வதந்தி வீடியோவுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா ஆக்ரோஷ கேள்வி; கட்சி தாண்டி கைகோர்த்த கனிமொழி!

மற்ற இடங்களில் நிலத்தைக் கையகப்படுத்துவதிலும், வெவ்வேறு துறைகளிடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெறுவதிலும் சட்டச் சிக்கல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலம் ஒரே இடத்தில் கிடைத்ததுடன், சென்னை மாநகராட்சி மற்றும் வீட்டு வசதி வாரியம் உடனடியாக ஆட்சேபனை இல்லா சான்றிதழை வழங்கியதால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத் தேர்வில் பட்டினப்பாக்கம் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) அரசு பொறுப்பேற்றவுடன், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்ய தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மூன்று இடங்கள் இறுதிப் பட்டியலில் கடுமையான போட்டியில் இருந்தன.

அவற்றில், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி வளாகமான HRS, நந்தம்பாக்கத்தில் உள்ள ஃபின்டெக் சிட்டி அருகே அமைந்துள்ள IDPL நிலம் மற்றும் பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் ஆகிய மூன்று இடங்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

இந்த மூன்று இடங்களில், அரசு நிலம் ஒரே இடத்தில் கிடைப்பது, துறைகளின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ்கள் கிடைத்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டு, புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago