சென்னை ரிப்பன் மாளிகை அருகே பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதலமைச்சர் நேரில் வந்து தங்களைச் சந்தித்து உரிய தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களை வஞ்சிப்பதாகக் குற்றம்சாட்டி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் கடந்த பல நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு கருப்பு நிற உடையணிந்து, வாயில் கருப்புத் துணி கட்டி, பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் தங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தொடர்ந்து பணியமர்த்தாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள தினக்கூலி ரூ.832 வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தங்களுக்கு ரூ.762 மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை, பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு மற்றும் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்றும், தூய்மைப் பணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்றும் தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பனையூரில் உள்ள அலுவலகத்தில் தங்களை நேரில் அழைத்து, தோளில் கைபோட்டு “நீங்கள் என் தாய்மார்கள், சகோதரிகள்” என்று முதலமைச்சர் உரிமையுடன் பேசியதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“அப்போது நாங்கள் குப்பை அள்ளுபவர்களாகத்தானே இருந்தோம்? இப்போதும் அதே பணியைத்தானே செய்கிறோம்? அப்போது எங்களுடன் பேசி, டீ கொடுத்து வரவேற்றீர்கள். ஆட்சிக்கு வந்தால் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நம்பிக்கை அளித்தீர்கள். ஆனால், இப்போது எங்களை நேரில் சந்திக்க மறுப்பது ஏன்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“நாங்கள் 15 ஆண்டுகளாகவும், 20 ஆண்டுகளாகவும் வேலை செய்து வருகிறோம். எங்களை எப்போது பணி நிரந்தரம் செய்யப் போகிறீர்கள்?” என்றும் தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனிடையே, அரசின் சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு மற்றும் இதர படிகள் தொடர்பான கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தங்களது பிரதான கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து முறையான தீர்வு கிடைக்கும் வரையிலும், முதலமைச்சரை நேரடியாகச் சந்திக்கும் வரையிலும் போராட்டம் ஓயாது என்று தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
“பனையூரில் தோளில் கைபோட்டு உரிமையுடன் பேசிய முதலமைச்சர், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்திக்க மறுப்பது ஏன்?” என்ற கேள்வியை முன்வைத்து, தங்களது கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
