Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

சமூக வலைதளங்களில் பதிவுகளை விட, அதற்குக் கீழ் பதிவாகும் கருத்துகளை அதிகமாகப் படிப்பது தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், பெரும்பாலும் தாம் கமெண்ட்களை படிப்பதில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருவதாகவும், தாம் வெளியிடும் பதிவுகளை லட்சக்கணக்கானோர் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அண்மையில், 169-வது முறையாக 21 கிலோமீட்டர் மாரத்தான் ஓடிய நிகழ்வை நேரலையாக பகிர்ந்திருந்ததாகவும், அந்த வீடியோவை இரண்டு முதல் மூன்று லட்சம் பேர் வரை பார்த்திருந்தாலும், அதில் ஒரு சிலர் மட்டுமே எதிர்மறையான கருத்துகளை பதிவிடுவதாகவும் தெரிவித்தார். அந்தச் சில கருத்துகளை மட்டும் படித்தால் மனஅழுத்தம் ஏற்படும் என்பதால், பெரும்பான்மையான மக்களின் ஆதரவு மற்றும் பாராட்டுகளையே முக்கியமாகக் கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Republic Tamil

இதையடுத்து, கலைஞர் கணினி கல்வி மையம் மற்றும் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை அண்மையில் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறினார். அங்கு தண்ணீர் வசதி, தூய்மை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா, பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றனவா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  விஜய்க்கு எதிராக ஸ்கெட்ச்..! சீமானை பொது வேட்பாளராக களம் இறக்கும் திமுக - அதிமுக! இடைத்தேர்தலில் பயங்கர ட்விஸ்ட்!

இந்த மையங்கள் அரசு திட்டத்தின் கீழ் செயல்படுபவை அல்ல என்றும், நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் உள்ளிட்டோரின் சொந்த உழைப்பு மற்றும் நிதி பங்களிப்பின் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார். இந்த மையங்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை நேரில் சென்று பார்ப்பது தங்களது பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் இந்த மையங்களை ஏன் தொடர்ந்து நடத்துகிறீர்கள் என்ற கேள்வி பலரிடமிருந்து எழுந்ததாக தெரிவித்த அவர், சமூக சேவைக்கும் அரசியல் பொறுப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். இந்த மையத்தின் மூலம் இதுவரை 1,430 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று, மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் பெறும் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார். இதில் 80 சதவீதம் பெண்கள் பயன் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

பயிற்சி மையத்தில் மாணவர்களை தேர்வு செய்யும்போது எந்த அரசியல் பாகுபாடும் பார்க்கப்படுவதில்லை என்றும், சைதாப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதையும் படியுங்க  “எடப்பாடி கோட்டையில் விரிசல்.. தவெக-வுக்கு தாவிய வெள்ளமண்டி நடராஜன்!”

வெளியில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து கற்க வேண்டிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக வழங்கி, அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்பாடு செய்து தருவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கம் என்றும் கூறினார்.

மேலும், தையல் மற்றும் பியூட்டிஷியன் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளை எந்த சூழலிலும் நிறுத்தப் போவதில்லை என்றும், பயிற்சி முடித்த பெண்கள் குழுக்களாக இணைந்து தொழில் தொடங்கினால், தனக்குத் தெரிந்த நிறுவனங்கள் மூலம் வேலை ஆர்டர்களைப் பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

எந்த அரசியல் மாற்றமும் இந்த பயிற்சி மையங்களின் செயல்பாட்டை பாதிக்காது என்றும், ஏழை மற்றும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சமூகப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago