சென்னை கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவின் ஏற்புத்திறன் (Maintainability) குறித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் வி.எஸ். பாபு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரியும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரியும் மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபாட் (VVPAT) சரிபார்ப்பில் முறைகேடுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் அவரது தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பது தொடர்பாகவும் ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக, முறைகேடுகள் நடந்ததாகக் கருதப்படும் குறிப்பிட்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியின் வாக்குச்சாவடி எண் 208-ல் இருந்த கட்டுப்பாட்டு அலகு (Control Unit), மு.க. ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருந்த வாக்குப்பதிவு அலகை (Ballot Unit) கண்டறியவில்லை என்ற தகவலையும், ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“ஒரு வாக்குப்பதிவு இயந்திர அமைப்பில் எனது பெயரே இடம்பெறவில்லை. நீதிமன்றம் எனக்குப் பரிகாரம் வழங்குகிறதோ இல்லையோ, இது கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்” என்று கபில் சிபல் வாதிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதற்கு 5 நாட்களுக்குப் பிறகு, மே 7-ஆம் தேதியே வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்க ஸ்டாலின் தரப்பு விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் ஜூலை 29-ஆம் தேதிதான் இயந்திரங்களைத் திறந்து சரிபார்க்கும் பணியைத் தொடங்கியதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் முடிவை எதிர்த்து 45 நாட்களுக்குள் தேர்தல் மனு (Election Petition) தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தாமதத்தால் அந்தக் காலக்கெடு முடிந்துவிட்டதாகவும், இதன் காரணமாகவே வேறு வழியின்றி ரிட் மனு (Writ Petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தரப்பில் வாதிடப்பட்டது.
எனினும், தேர்தல் ஆணையம் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் 329(b) பிரிவின்படி, தேர்தல் முடிவை ரிட் மனு மூலம் எதிர்த்து வழக்குத் தொடர முடியாது என்றும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் தேர்தல் மனு மூலமாக மட்டுமே தேர்தல் முடிவைச் சவால் செய்ய முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 329(b) பிரிவின் தடையைத் தவிர்ப்பதற்காக ஸ்டாலின் தரப்பில் சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி மனு “Artful Drafting” முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் 2025-ஆம் ஆண்டு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போதைய மனுவைத் திரும்பப் பெற்று, புதிய மனுவைத் தாக்கல் செய்ய ஸ்டாலின் தரப்பில் அனுமதி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஸ்டாலின் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றதா, அதாவது அதன் ஏற்புத்திறன் குறித்து தீர்மானிக்க வேண்டிய கேள்வியில் தங்களது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.
இதனால், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்குமா என்பது, நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவிலேயே தெரியவரும்.
