தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் புதுப்புது சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், தவெக அமைச்சர் ராஜ்மோகனின் பொலிட்டிக்கல் பி.ஏ (Political PA) அஜய்யை சுற்றியுள்ள பின்னணி, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி மாறிய ‘நிழல்’ பி.ஏ
அமைச்சர் ராஜ்மோகனின் நிழலாக வலம் வரும் அஜய்யின் கடந்த கால அரசியல் பயணம் சாதாரணமானதல்ல. திமுக மற்றும் பாஜக ஆகிய இரு எதிரெதிர் துருவக் கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இவர். குறிப்பாக, பாஜக தலைவர் அண்ணாமலையோடு பயணித்த அனுபவம் கொண்டவர். பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனின் வார்ரூமிலேயே முக்கிய பங்காற்றிய அஜய், 2026-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தனது தாய் மாமன் நாஞ்சில் சம்பத்தின் தயவால் தவெக அமைச்சர் ராஜ்மோகனுக்கு பொலிட்டிக்கல் பி.ஏ-வாக வலம் வருகிறார்.

பாதுகாப்பில் சமரசமா?
திமுக, பாஜகவின் முக்கிய தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த ஒரு நபர், இன்று தவெக அமைச்சரின் உதவியாளராக செயல்படுவது எந்த அளவிற்குப் பாதுகாப்பானது? மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பிற அமைச்சர்கள் பங்கேற்கும் அதிமுக்கிய அரசாங்க ஆலோசனைக் கூட்டங்களில் அஜய் கம்பீரமாக அமர்ந்திருக்கும் வீடியோக்கள் வெளியாகி, அரசு ரகசியங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளன.
“புதிய பாதை, தூய்மையான அரசியல்” என்ற கொள்கையோடு உருவெடுத்த தவெக, ஆட்சியைப் பிடித்த சில நாட்களிலேயே மாற்றுக்கட்சிகளின் ஊடுருவலுக்கு வழிவகுத்துவிட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் வார்ரூமில் இருந்த ஒருவரை, அமைச்சரின் அதிகாரப்பூர்வமான ஆலோசனைக் கூட்டங்களில் அமர வைப்பது தவெக ஆட்சியின் மிகப்பெரிய நிர்வாகக் குளறுபடி.

அரசின் ரகசிய முடிவுகள், திட்டங்கள் எதிர்கட்சிகளுக்குக் கசிவதற்கு அஜய் தகுதியற்ற பின்னணி கொண்டவர்களின் நியமனமே வழிவகுக்கும். உடனே இந்த விவகாரத்தில் தலையிட்டுச் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால், தவெகவின் ‘தூய்மையான அரசியல்’ பிம்பம் முற்றிலும் நொறுங்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
