Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இயற்கை சீற்றங்களில் நிலநடுக்கம் எப்போது, எப்படி ஏற்படும் என்பது இன்றளவும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. பெரும் அழிவையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் இயற்கை பேரிடர்களில் நிலநடுக்கம் முக்கியமானதாகும். ஒவ்வொரு முறையும் நில அதிர்வு ஏற்படும்போது, பெரும் சேதங்களும், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடிந்தால், பல உயிர்களை காப்பாற்ற முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்காக சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் ஒரு முக்கியமான மற்றும் சவாலான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்த திட்டத்திற்கு FEAR-2 (Fault Activation and Earthquake Rupture) என்று பெயரிடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதிக்குள் சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்குள் அமைந்துள்ள இந்த ஆய்வு மையத்திற்கு செல்ல விஞ்ஞானிகள் மின்சார வாகனங்களை பயன்படுத்தியுள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் டொமெனிகோ ஜியார்டினி கூறுகையில், எங்கள் தலைக்கு மேல் சுமார் ஒரு கிலோமீட்டர் உயர மலை உள்ளது. நில அதிர்வின் போது பாறைகள் எவ்வாறு நகர்கின்றன, அழுத்தம் எப்படி உருவாகிறது என்பதை நேரடியாக உற்று நோக்க முடிகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் நூற்றுக்கணக்கான சென்சார் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற இந்த சோதனையில் சுமார் 8,000 சிறிய நில அதிர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை மனிதர்கள் உணர முடியாத அளவிற்கு மிகச் சிறிய அதிர்வுகளாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலைக்குள் பொருத்தப்பட்ட அதிநவீன கருவிகள் இந்த சிறிய அதிர்வுகளை மிகத் துல்லியமாக பதிவு செய்துள்ளன.

இயற்கையை ஆராய்வது எப்போதும் சவாலானதும் ஆபத்தானதுமாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஆய்வுகள் சில அபாயங்களை உள்ளடக்கியிருந்தாலும், எதிர்காலத்தில் நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணிக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் பெரும் உதவியாக இருக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் எதிர்கால நிலநடுக்க கணிப்பு தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago