Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கேரள மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், போலீசார் “ஆபரேஷன் தூபான்” என்ற பெயரில் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீகாரியம் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விசாரணையில், ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நபர் வசித்து வந்த குடியிருப்பில் கஞ்சா தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையின் போது, அந்த குடியிருப்பில் சுமார் 70 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாகவும், வீட்டுக்குள்ளேயே ஒரு சிறிய கஞ்சா தோட்டம் அமைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த குடியிருப்பில் வசித்து வந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்க  என்னது.. கஞ்சா செடி வளர்த்தது பசு மாட்டுக்கா? - போலீசாரையே அதிர வைத்த ஓட்டுனரின் வாக்குமூலம்!

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இளம் வயதிலேயே கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான அவர், வெளியே விலை கொடுத்து வாங்க விரும்பாத காரணத்தால், தனது சொந்த தேவைக்காக வீட்டிலேயே கஞ்சா வளர்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், கஞ்சா செடிகள் வளர்ந்த பிறகு அவற்றின் இலைகளை பறித்து பாலில் கலந்து அருந்தியதுடன், இட்லி மற்றும் தோசைக்கு சட்னியாகவும் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். கஞ்சா இலைகளை அரைத்து சட்னி தயாரித்து உணவுடன் உட்கொண்டதாக அவர் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையின் போது, தனது சொந்த மாநிலமான ஹரியானாவில் கஞ்சா வளர்ப்பது தவறில்லை என்று நினைத்ததாகவும், அதே எண்ணத்தில் கேரளாவிலும் வீட்டிற்குள் கஞ்சா வளர்த்ததாகவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், கஞ்சா வளர்ப்பு மற்றும் வைத்திருப்பது சட்டவிரோதமான குற்றம் என்பதால், அவரை போலீசார் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மாதம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் ஐடி மேலாளரான இவர், வீட்டுக்குள்ளேயே கஞ்சா தோட்டம் அமைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க  இந்திய குடியுரிமைக்கு புதிய அதிரடி ரூல்ஸ்… மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!”

இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கஞ்சா வளர்ப்பதும், பயன்படுத்துவதும் சட்டவிரோதமான செயலாகும் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago