மத்திய பிரதேசத்தில் பெண் யூடியூபர் ஒருவர் வெளியிட்ட ‘ஹவுஸ் டூர்’ வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, “சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டார்” என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சனா குர்ஜார் என்ற பெண் யூடியூபர், தனது யூடியூப் சேனலில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் வீட்டின் அமைப்பை வெளிப்படுத்தும் ‘ஹோம் டூர்’ வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.
அந்த வீடியோக்களில், தனது வீட்டின் ஒவ்வொரு அறை, அலமாரிகள், பாதுகாப்புப் பெட்டிகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது வரை தெளிவாகக் காண்பிக்கப்பட்டிருந்தது.
இந்த வீடியோக்களை கவனித்த மர்ம நபர்கள், வீட்டின் அமைப்பு, பாதுகாப்பு விவரங்கள் மற்றும் நகைகள் வைக்கப்பட்ட இடம் ஆகியவற்றை முன்கூட்டியே அறிந்து கொண்டு, ரஞ்சனாவின் வீட்டிற்குள் புகுந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டில் இருந்த சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணம் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சனா குர்ஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு விவரங்களை வெளிப்படையாகப் பகிர்வோருக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
வீட்டின் பாதுகாப்பு அமைப்புகள், லாக்கர்கள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களின் இருப்பிடங்களை வீடியோக்களில் காட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தேவையற்ற ஆபத்துகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
