
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் குடிமகன்கள் இனி பர்ஸில் கத்தை கத்தையாக பணத்தை எடுத்துச் செல்ல முடியாது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் ஒரு புதிய அதிரடி விதிமுறை அமலுக்கு வருகிறது.
ரூ.1,000-க்கு மேல் மது வாங்கினால், கட்டாயம் டிஜிட்டல் முறையில்தான் பணம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில வணிகக் கழகமான டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.
என்ன சொல்கிறது புதிய சுற்றறிக்கை? டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கு.நந்தகுமார் கடந்த திங்கள்கிழமை அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள அதிரடி சுற்றறிக்கையில்தான் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,048 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளிலும் இந்த விதி பொருந்தும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 1, 2026 முதல்: ரூ.1,000-க்கு மேல் விற்பனை என்றால் UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமே பணம் செலுத்த வேண்டும்.
ஜனவரி 1, 2027 முதல்: இந்த வரம்பு மேலும் குறைக்கப்பட்டு ரூ.500-க்கு மேல் விற்பனைக்கே டிஜிட்டல் கட்டாயமாக்கப்படும்.
ரூ.1,000 வரை: (தற்போதைக்கு) ரொக்கமாகவோ அல்லது டிஜிட்டல் முறையிலோ செலுத்தலாம்.
ஏன் இந்த திடீர் முடிவு? – இந்த முடிவுக்குப் பின்னால் மூன்று முக்கிய காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
1. எம்.ஆர்.பி.யை விட கூடுதல் விலை: “பாட்டிலில் ஒட்டியிருக்கும் விலையை விட ரூ.20, ரூ.50 அதிகமாக வசூலிக்கிறார்கள்” என்று தமிழகம் முழுவதும் இருந்து குவிந்த புகார்களே முதல் காரணம். பணமாக வாங்கும்போது எந்த ஆதாரமும் இல்லாமல் போய்விடுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை என்றால், ஒவ்வொரு பில்லும் நேரடியாகப் பதிவாகும். முறைகேட்டை உடனே கண்டுபிடித்துவிடலாம்.
2. கணக்கில் வராத பணம்: கடைகளில் பெரும் தொகை ரொக்கமாகத் தேங்குவதால், கணக்கு வழக்குகளில் குளறுபடி, பணம் கையாளும் சுமை, ஊழியர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எனப் பல சிக்கல்கள். இதைத் தவிர்க்கவே, பணம் நேரடியாக டாஸ்மாக்கின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் வகையில் POS இயந்திரங்கள் மூலம் வசூலிக்க உத்தரவு.
3. ஊழியர்களின் ‘சொந்த’ QR கோடு மோசடி: இதுதான் ஹைலைட். இதுவரை சில கடைகளில் ஊழியர்கள் தங்களது சொந்த UPI ஐடி, தனிப்பட்ட QR கோடு, வங்கிக் கணக்குகளில் பணம் வாங்கி மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இனி அதற்கு ‘செக்’ வைக்கும் வகையில், “ஊழியர்கள் யாரும் சொந்த QR கோடில் பணம் வாங்கக்கூடாது. அனைத்து பணமும் டாஸ்மாக் நிர்ணயித்த POS இயந்திரம் வழியாகத்தான் செல்ல வேண்டும்” என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடைகளில் என்னென்ன மாறும்?
சுற்றறிக்கையின்படி, மாவட்ட மேலாளர்கள் உடனடியாகச் செய்ய வேண்டியவை…
அனைத்துக் கடைகளிலும் POS இயந்திரங்கள் முறையாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
ஊழியர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் கணக்கு சரிபார்ப்பு குறித்துப் பயிற்சி அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு விற்பனைக்கும் கட்டாயம் பில் கொடுக்க வேண்டும்.
பில்லில் உள்ள தொகை MRP விலையுடன் சரியாகப் பொருந்த வேண்டும்.
கடை வாசலில் 2 அடிக்கு 3 அடி அளவில் புதிய கட்டண முறையை விளக்கும் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும்.
மாவட்ட மேலாளர்கள் மற்றும் தலைமை அலுவலக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதிக விலை வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்க **கட்டணமில்லா எண் 1800 889 2015**-ல் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தரப்பு – வரவேற்பா? எதிர்ப்பா? “இதுவரை கேஷ் கொடுத்துவிட்டு அதிக விலைக்கு வாங்கி ஏமாந்தோம். இனி போனில் பே பண்ணினால் ஆதாரம் இருக்கும்” என்று ஒரு தரப்பினர் வரவேற்கின்றனர்.
அதே நேரத்தில், “கிராமப்புறங்களில் இன்னும் பலருக்கு UPI பழக்கமில்லை. சர்வர் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்வது?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டாஸ்மாக் வரலாற்றில் முதன்முறையாகப் பணப்புழக்கம் முழுமையாகக் கண்காணிப்பு வளையத்துக்குள் வருகிறது. இது வெளிப்படைத்தன்மைக்கான அடியா,? அல்லது முழு டிஜிட்டல் கட்டுப்பாட்டுக்கான தொடக்கமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
