வேலூர் அருகே பாமக பிரமுகர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை. தடுக்க சென்றவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே முன்விரோத தகராறில் பாமக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை, தடுக்க சென்ற நண்பர் மீதும் துப்பாக்கி சூடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேங்குன்றத்தைச் சேர்ந்தவர் பாமக பிரமுகர் ஞானவேல்(49). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூவரசன் என்பவருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை சேங்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே ஞானவேல் அவரது நண்பர் ரகு ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பூவரசன் தான் கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ஞானவேலை சுட்டுள்ளார்.
இதனை தடுக்க முயன்ற ரகுவையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஞானவேலின் மார்பு பகுதியில், குண்டு பாய்ந்ததில் ரத்தம் சொட்ட, சொட்ட சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். உடன் இருந்த ரகுவுக்கு வலது கை தோள்பட்டையில் குண்டு பாய்ந்து அலறி துடித்துள்ளார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதை பார்த்த பூவரசன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து ரத்த வௌத்தில் இருந்த ஞானவேல் மற்றும் ரகு ஆகிய இருவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஞானவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த ரகுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த ஞானவேலின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் ஏற்ற முயன்றனர். அப்போது அங்கிருந்த உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் ஆம்புலன்ஸில் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும் துப்பாக்கியால் சுட்ட பூவரசனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அடுத்து அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஞானவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உரிய அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியை வைத்திருந்து, அதனை பயன்படுத்தி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து சேங்குன்றம் பகுதியில் மறைந்திருந்த பூவரசனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்தனர்.
முன்விரோதம் காரணமாக நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூடு:
நேற்று இரவு பூவரசனை பிடித்த காவல்துறையினர் இன்று காலை அவர் கொலைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை எங்கு மறைத்து வைத்துள்ளார் என்பதை காண்பிப்பதற்காக காவல்துறையினர் அவரை கொலை நடந்த சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது உதவி ஆய்வாளர் ராஜா என்பவரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது அவரை வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் ராஜா மற்றும் குற்றவாளி பூவரசன் இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
