மத்திய கிழக்கில் எந்த நேரமும் ஒரு மாபெரும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாகப் பரிசீலித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு கூடுதலாகப் பல டஜன் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை அனுப்ப அமெரிக்கா தயாராகி வருகிறது.
டிரம்பின் மெகா திட்டம்
கடந்த செவ்வாயன்று அமெரிக்காவின் ‘சிச்சுவேஷன் ரூம்’ அவசரக் கூட்டத்தின் போது, அதிபர் டிரம்பிடம் பல்வேறு புதிய இராணுவத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களோடு நிறுத்திக் கொள்ளாமல், அதை மேலும் விரிவுபடுத்தி, ஈரானுக்குள் இருக்கும் முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி நிலையங்களை நேரடியாகக் குறிவைக்க இந்தத் திட்டங்கள் வழிவகுக்கின்றன.

டிரம்ப் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்றாலும், வரும் நாட்களில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் உத்தரவுகளை அவர் பிறப்பிக்கக்கூடும் என்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலக்காகப் போகும் அணுசக்தி மையங்கள்
அமெரிக்காவின் இந்த புதிய வியூகத்தில் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள், செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு வைக்கப்பட்டிருக்கும் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் முக்கிய விருப்பங்களாக உள்ளன. யுரேனியம் கையிருப்பை நிலத்தடிக்கு இன்னும் ஆழமாகப் புதைத்து, ஈரான் அதை அணுக முடியாதபடி செய்வதே இதன் நோக்கம்.
இதுதவிர, நிலத்தடியில் கட்டுமானத்தில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் ஈரானின் ‘பிக்காக்ஸ் மலைத் தளம்’ மற்றொரு சாத்தியமான இலக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், அணுசக்தித் திட்டம் குறித்த அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்கவும் ஈரானைக் கட்டாயப்படுத்தும் அளவுக்கு, அந்நாட்டிற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்த டிரம்ப் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
இதுகுறித்து டிரம்ப், தனது துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் கூட்டுப் படைத் தலைமைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோருடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் குவியும் அமெரிக்க வான்படை
அமெரிக்கா ஏற்கனவே டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 30 இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானங்களையும், தெற்கு இஸ்ரேலில் உள்ள ரமோன் விமான நிலையத்தில் அதே எண்ணிக்கையிலான விமானங்களையும் நிறுத்தியுள்ளது. தற்போது மோதலின் தொடக்கத்தில் இருந்த நிலைக்கு விமானப் படையணியை மீட்டெடுக்கும் நோக்கில், மேலும் பல டஜன் விமானங்களை நிலைநிறுத்த வாஷிங்டன் விரும்புவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், போர், குண்டுவீச்சு விமானங்கள் நீண்ட தூரம் பயணித்து, நீண்ட நேரம் வானில் நிலைத்திருந்து தாக்குதல் நடத்த அத்தியாவசியமானவை என்பதால், ஈரானுக்கு எதிரான நீண்டகால நடவடிக்கைக்கு அமெரிக்கா இவற்றை அஸ்திரமாகப் பயன்படுத்துகிறது. பிராந்தியத்தில் உள்ள மற்ற தளங்கள் ஈரானிய ஏவுகணைகளுக்கு இலக்காகலாம் என்பதால், பாதுகாப்பான பென் குரியன் விமான நிலையத்தையே அமெரிக்கா தேர்வு செய்துள்ளது. இதற்கான இறுதி முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு
ஹோர்முஸ் ஜலசந்திக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் உள்ள ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்து 7-வது நாளாக நீடித்து வருகிறது. இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் முக்கிய மையமாகச் செயல்படும் துறைமுக நகரமான பண்டர் அப்பாஸைச் சுற்றியுள்ள குறைந்தது 7 பாலங்களை அமெரிக்கப் படைகள் குண்டுவீசி அழித்துள்ளன. பண்டர் அப்பாஸ் வழியாக ஹோர்முஸ் ஜலசந்தியின் மற்ற பகுதிகளுக்கு ஈரான் வெடிமருந்துகளையும் கூடுதல் படைகளையும் கொண்டு செல்வதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜீரோ ஹவர் எச்சரிக்கை
இதற்கிடையே ஜோர்டான், கத்தார், பஹ்ரைன், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஜோர்டானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பல அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள், போர் விமானங்களைத் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் அழித்துவிட்டதாக ஈரான் கூறியுள்ளது.
மேலும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சென்ட்காம் கடற்படைப் பிரிவுகளின் நகர்வுகள் அனைத்தும் தங்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஈரான் கடற்படைத் தலைமையகம் எச்சரித்துள்ளது.
“அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஈரானின் ஆயுதப் படைகள் மேற்கொள்ளவிருக்கும் மாபெரும் தாக்குதலின் பூஜ்ஜிய நேரத்தை அமெரிக்கர்கள் ஒவ்வொரு கணமும் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஈரானிய ஊடகங்கள் மூலம் அந்நாட்டு கடற்படை விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை, உலக நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
