ஈரானின் ஆயுதங்கள், ட்ரோன் திட்டம் தொடர்பாக அமெரிக்கா ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறை, சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்கள் உட்பட 10 தனிநபர்கள், நிறுவனங்கள் மீது புதிய தடைகளை விதித்துள்ளது.
ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், தொழில்நுட்பத்தை இந்த நிறுவனங்கள் ஈரானுக்கு வழங்கி வந்ததாக அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சீனா பயணத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. டிரம்ப் இதற்கு முன்னர் நவம்பர் 2017-ல் சினாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஈரானின் இராணுவத் தொழில் மீண்டும் வலுவடைவதை அனுமதிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க கருவூலத் துறை தெளிவாகக் கூறியுள்ளது. ஈரானுக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கிகள், வணிகங்களுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக, சீனாவில் உள்ள சிறிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஈரானுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட விமான நிறுவனங்களை அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் யுஷிதா ஷாங்காய் இன்டர்நேஷனல் டிரேட் கோ லிமிடெட் நிறுவனமும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து ஆயுதங்கள் தொடர்பான பொருட்களை ஈரான் பெறுவதற்கு இந்த நிறுவனம் உதவியதாக அமெரிக்கா கூறுகிறது. ஈரானுக்காகப் பொருட்களை வாங்குவதில் ஈடுபட்டிருந்த ஒரு ஹாங்காங் நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கான டாலர்களை அனுப்பியதாக துபாயின் எலைட் எனர்ஜி FZCO மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரானின் ஆயுதக் கொள்முதல் வலையமைப்பில் இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாக ஹாங்காங்கின் ஹெசின் இண்டஸ்ட்ரி கோ லிமிடெட் மற்றும் பெலாரஸின் ஆர்மரி அலையன்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைகளுக்காக ஆயுதங்களை வாங்க உதவியதாக முஸ்டாட் லிமிடெட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரானின் பிஷ்காம் எலக்ட்ரானிக் சேஃப் நிறுவனம், ட்ரோன்களில் பயன்படுத்தப்படும் மோட்டார்களை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவின் ஹிடெக்ஸ் இன்சுலேஷன் நிங்போ கோ. லிமிடெட் நிறுவனம், பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தடைகள் மூலம் ஈரானின் சக்தியைக் குறைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிப்ரவரியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியது. இது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதித்து, விலைகள் கடுமையாக உயரக் காரணமாக அமைந்தது.
