தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அம்மா உணவகத்தை சீரமைக்க வேண்டும் என்பதும் அதில் ஒன்று.
இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆளுங்கட்சியினர் தாங்களே மக்கள் பிரதிநிதிகள் போலவும் உயர் அதிகாரிகள் போலவும் செயல்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் சரியில்லை என்ற புகார் உள்ளது . அங்கு மருத்துவத் துறைக்கு சம்பந்தமில்லாத பெண்மணி ஒருவர் மருத்துவர் போல உடைய அணிந்து கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதேபோல் கடையநல்லூர் நகராட்சி அம்மா உணவகத்தில் ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளரான நியாஸ் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் சரியாக இல்லை அது சரி இல்லை என அங்குள்ள பணியாளர்களை கேள்வி கேட்டதுடன் நகராட்சி ஆணையரிடமும் இதை உடனடியாக சரி செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அரசுத் துறையில் நடக்கும் குளறுபடிகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவது தவறு இல்லை என்றாலும் ஒரு உயர் அதிகாரி போலவோ மக்கள் பிரதிநிதி போலவோ ஆளும் கட்சியினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வு செய்வது உத்தரவிடுவதும் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சாதாரண கட்சி தொண்டர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்திருக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் எல்லா அரசு துறைகளுக்கும் இது பரவி அரசு இயந்திரமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும் , எனவே இது குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
