Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஜூன் 21, 2026 அன்று மாலை, தூத்துக்குடி மாவட்டத்தின் வாகைகுளம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் வரலாறு காணாத வகையில் டொர்னடோ (Tornado) போன்ற அதிபயங்கர சுழல்காற்று வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் மிகவும் அரிதாகக் காணப்படும் இந்த வானிலை நிகழ்வு, அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடி – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள வாகைகுளம் சுங்கச்சாவடி, அதன் அருகிலுள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்தின் புறநகர்ப் பகுதிகள் இந்த சுழல்காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அதிவேகமாக வீசிய சுழல்காற்றின் தாக்கத்தால், வாகைகுளம் சுங்கச்சாவடியின் மேற்கூரைகள், கண்ணாடிகள் மற்றும் கணினி அமைப்புகள் முற்றிலும் சேதமடைந்து காற்றில் பறந்தன.

மேலும், பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரைத் தகடுகள் மற்றும் சுங்கச்சாவடியின் இரும்புத் தகடுகள் காற்றில் பறந்து விழுந்ததில், அங்கு இருந்த 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படியுங்க  ரூட்டை மாற்றிய மக்கள் சக்தி! 56 வருடங்களுக்குப் பின் தேனி மலைக் கிராமத்திற்குள் சீறிய அரசுப் பேருந்து!

இதனிடையே, காற்றில் பறந்த கூரைத் தகடுகள் உயர் அழுத்த மின்கம்பிகளில் மோதியதால் மின்கம்பங்கள் சேதமடைந்து, அப்பகுதியில் மின்விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

தனியார் வானிலை ஆய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, இந்த அரிய சுழல்காற்றின்போது மணிக்கு 170 முதல் 220 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது அமெரிக்காவின் மேம்படுத்தப்பட்ட புஜிட்டா (Enhanced Fujita Scale) அளவீட்டின்படி EF2 ரக டொர்னடோவின் தீவிரத்துக்கு இணையானதாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வானத்தில் உருவான கார்மேகக் கூட்டங்கள் (Cumulonimbus Clouds) மத்தியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மேல்நோக்கிக் காற்றுச் சுழற்சி (Thunderstorm Updraft) மற்றும் லேண்ட்ஸ்பவுட் (Landspout) போன்ற அமைப்புகளின் விளைவாக, புனல் வடிவ மேகம் தரையைத் தொட்டு சுழன்றதால் இந்த அரிய வானிலை நிகழ்வு ஏற்பட்டதாக வானிலை நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த வினோத சுழல்காற்று, பின்னர் தூத்துக்குடி விமான நிலைய மைதானப் பகுதிக்கு அருகே படிப்படியாக வலுவிழந்து கலைந்தது.

இதையும் படியுங்க  விவசாயிகளே உஷார்! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களை குறிவைக்கும் எல்-நினோ -மத்திய அரசு போட்ட ரெட் அலர்ட்!

இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள இந்த ராட்சத சுழல்காற்றின் நேரடி காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. தமிழகத்தில் அரிதாக நிகழும் இந்த அதிபயங்கர வானிலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago