Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Arivalayam

“ஒரணியில் தமிழ்நாடு” எனத் தேர்தல் களத்தில் தி.மு.க தலைமை முழக்கமிட்டுக் கொண்டிருக்க, தேனி மாவட்டத்திலோ “ஒரணிக்குள் பல அணிகள்” எனப் பிரிந்து நின்று கட்சித் தலைமைக்கே தோல்வியைப் பரிசாக வழங்கியுள்ளனர் தேனி மாவட்ட தி.மு.க-வினர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தி.மு.க தலைமை தொகுதி வாரியாகக் கள ஆய்வு நடத்தி வரும் வேளையில், கம்பத்தில் நடந்த ஆய்வுக் கூட்டம் உட்கட்சிப் பூசலின் உச்சக்கட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் வார்டு வாரியாகக் கிடைத்த வாக்குகள், தோல்விக்கான காரணங்கள் குறித்து அறிந்துகொள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கம்பம் நடராஜர் திருமண மண்டபத்தில் கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரபு கஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஆனால், கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் வந்திருந்த நிலையிலும், தேனி தி.மு.க-வின் முக்கிய முகமான எம்.பி. தங்கத்தமிழ்செல்வனின் ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக இந்த கூட்டத்தைப் புறக்கணித்தனர். அதேபோல், முன்னாள் எம்.எல்.ஏ-வான மாவட்டச் செயலாளர் இராமகிருஷ்ணன் மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளும் கூட்டப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. மேலிடப் பார்வையாளர்கள் முன்பே உட்கட்சிப் பூசலைத் தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர் தேனி உடன்பிறப்புகள்.

தேனி தி.மு.க-வில் கோஷ்டி மோதல் என்பது நேற்று இன்று ஆரம்பித்ததல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனும், எம்.பி. தங்கத்தமிழ்செல்வனும் அரசு விழாவில், தேனி மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே பகிரங்கமாக சண்டையிட்டுக் கொண்டது ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் பெரும் நாடாளுமன்றப் பேசுபொருளானது.

தற்போது முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணனும், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜனும் ஓரணியிலும்; எம்.பி. தங்கத்தமிழ்செல்வன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றொரு அணியிலும் பிரிந்து நின்று தங்களுக்குள் குஸ்தி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் இந்த ‘ஈகோ’ யுத்தத்தால் தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தேனி மாவட்டத்தில் படுதோல்வியைச் சந்திக்க நேரிட்டது எனத் தொண்டர்களே குமுறுகின்றனர்.

கம்பத்தில் கள ஆய்வுக் கூட்டம் நடந்த மண்டபமே மாவட்டச் செயலாளர் இராமகிருஷ்ணனின் சொந்த மண்டபம் என்பதால், நிர்வாகிகள் யாரும் அவர் மீதான புகார்களைப் பார்வையாளர்களிடம் வெளிப்படையாகக் கூற முடியவில்லை என்ற அதிருப்தியும் எழுந்துள்ளது. “வேலியே பயிரை மேய்ந்த கதையாக”, மாவட்டச் செயலாளரின் சொந்த இடத்தில் கூட்டம் நடத்தினால் அவரிடம் எப்படி நடுநிலையான விசாரணையை எதிர்பார்க்க முடியும் என நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

இதற்கிடையில், தேர்தலுக்குச் சற்று முன்பாக தி.மு.க மாநிலப் பொறுப்பில் இருந்த ஜெயக்குமார், தனக்கு சீட் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அ.தி.மு.க-வுக்குத் தாவியது கம்பம் மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் தி.மு.க-வின் வாக்குகளை அ.தி.மு.க-வின் பக்கம் மடைமாற்றியது.

தலைமைக்கு ஒரு முகம், உள்ளூரில் ஒரு முகம் என இரட்டை வேடம் போடும் இந்த கோஷ்டி மோதல்களுக்கு தி.மு.க தலைமை உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், தேனி மாவட்டத்தில் தி.மு.க மீண்டெழுவது குதிரைக்கொம்பு தான் எனத் தேனி மாவட்ட தி.மு.க தொண்டர்களும் பொதுமக்களும் காரசாரமாகப் பேசி வருகின்றனர்.

-த.முத்துவெளியப்பன், தேனி மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago