தமிழ்நாடு அரசியலையும், கல்வித்துறையையும் ஒருசேர உலுக்கியிருக்கிறது தனியார் பள்ளிகள் நிரந்தர அங்கீகார மோசடி புகார்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் டி.என்.சி.இளங்கோவன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த பரபரப்பு புகார்தான் இந்தப் பூகம்பத்துக்கு தொடக்கப்புள்ளி.
புகாரில் என்ன இருக்கிறது?
கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் கட்டுமான அனுமதிகள் (CMDA) பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சமாக வசூலித்து மோசடி செய்யப்பட்டதாக அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 26-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அன்பில் மகேஷ் தரப்பு என்ன சொல்கிறது?
இந்தக் குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஷ் தரப்பு நீதிமன்றத்தில் முற்றிலும் மறுத்துள்ளது. “சிலர் அவரது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பணம் வசூலித்திருக்கலாம். ஆட்சி மாற்றத்திற்குப் பின் தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்தப் புகாருக்குக் காரணம்” என்பது அவரது வழக்கறிஞர்களின் வாதம்.
மூன்றாவது கைதும்… தொடரும் மர்மமும்!
இந்த வழக்கில் ஏற்கெனவே அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார், ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் முத்துக்குமார் சரணடைந்ததன் மூலம் கைது எண்ணிக்கை மூன்றாகியிருக்கிறது.

ஆனால், “என்னிடம் பணம் கேட்டார்கள்… நானும் லஞ்சம் கொடுத்தேன்” என்று பேட்டி அளித்து, புகாரின் மையமாக இருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த விஜய் வித்யாலயா பள்ளிகளின் தாளாளர் டி.என்.சி.இளங்கோவன் மட்டும் இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பதுதான் பலரையும் நெருட வைக்கிறது என்றும் வளர்ந்த அமைச்சரின் ஆசி இருப்பதால் நடவடிக்கை இருக்காது என கிசுகிசுக்கின்றனர்
கடந்த அட்சி ஆதரவோடு ஒப்பந்த அடிப்படையில் (தனியார்)பஸ் நிலையம் அமைத்து அடாவடி செய்து வருவது , தனது டிஎன்சி சிட்ஸ் ஃபண்ட்க்கு போட்டியாக வளர்ந்த கயல் மற்றும் ரத்னா சிட்ஸ் ஃபணான்ஸ் அதிபர்களை சூழ்ச்சியால் வீழ்த்தி இரு சிட்பண்ட் கம்பெனிகளை மிரட்டி வாங்க பேரம் பேசி வருவது தொடர்பான உள்ளூரில் சர்ச்சைகள் இளங்கோவன் மீது உண்டு என்கிறார்கள். இதற்காக அவருக்குப் பின்னணியில் தி.மு.க., த.வெ.க. ஆதரவு இருப்பதாகக் கூறப்படுவதே அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கத்துக்குக் காரணமா என்கிற கேள்வியும் வலுக்கிறது.
லஞ்சம் கொடுத்ததாகத் தானே ஒப்புக்கொண்டவர் சாட்சியா… குற்றவாளியா… சட்டம் என்ன சொல்கிறது… விசாரணை எந்தத் திசையில் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
