Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

agam

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் அகமுடையார், கள்ளர், மறவர் சமூகங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ‘தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நலச்சங்கம்’ என்ற அமைப்பு உருவாகி, பல்வேறு மாவட்டங்களில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.

முக்குலத்தோரை சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களது பணிசார் நலன்கள், சமூக முன்னேற்றம், தங்கள் சமூக மாணவர்களின் கல்வி உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக அகம் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும் அகமுடையார், கள்ளர், மறவர் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் முயற்சியாக ‘அகம்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது.

42 அரசுத் துறைகளில் விரிவடையும் அமைப்பு
‘அகம்’ என்ற பெயரில் இடம்பெற்றுள்ள ‘அ’ என்பது அகமுடையார், ‘க’ என்பது கள்ளர், ‘ம்’ என்பது மறவர் ஆகிய சமூகங்களைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்து.

நில அளவீட்டுத் துறை தொடங்கி வருவாய்த் துறை, சீருடைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 42 அரசுத் துறைகளில் இந்த அமைப்பு தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து, மாவட்ட அளவில் நிர்வாகப் பொறுப்பாளர்களை நியமிப்பதுடன் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க  "முதலில் ஒழுக்கத்தை கத்துக்கொடுங்க!" - தவெக நிர்வாகி புகாரில் CM விஜய்யை நேருக்கு நேர் விளாசிய கனிமொழி!

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, திருச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைப்புக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அதன் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலியில் ஐம்பெரும் விழா
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு அகம் அலுவலர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு, ஆசிரியர் பணி, அரசுப் பணி மற்றும் ஓய்வுபெற்ற அலுவலர்களின் சேவையைப் பாராட்டும் நோக்கில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவில், 2026ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. அதேபோல், பள்ளிகளில் 100 சதவீதத் தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் மற்றும் பாராட்டுகள் வழங்கப்பட்டன.

மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களும் பாராட்டப்பட்டனர். 2026ஆம் ஆண்டில் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற அலுவலர்களின் சேவையைப் பாராட்டுவதுடன், புதிதாக அரசுப் பணியில் நியமனம் பெற்றவர்களையும் வரவேற்றுச் சிறப்பிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதையும் படியுங்க  'டம்மி’யான வெள்ளை அறிக்கை..! நிதியமைச்சரை ஏமாற்றிய அதிகாரிகள்..! கடும் கோபத்தில் முதல்வர் விஜய்..!

கல்வி, விளையாட்டு, பணியாளர் நலனுக்கு முக்கியத்துவம்
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்களை ஒருங்கிணைப்பதுடன், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, விளையாட்டுத் திறன், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, அரசுப் பணியாளர்களின் சேவையை அங்கீகரிப்பதற்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் வாய்ப்பாக அமைகின்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தனது அமைப்புக் கட்டமைப்பை விரிவுபடுத்தி வரும் ‘அகம்’ அமைப்பு, எதிர்காலத்தில் கல்வி மற்றும் பணியாளர் நலன் சார்ந்த செயல்பாடுகளை எந்த அளவுக்கு முன்னெடுக்கப் போகிறது என்பதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago