முதலமைச்சராக ஜோசப் விஜய் பல முக்கிய துறைகளின் பொறுப்புகளை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் தொடர்பான நிர்வாகம், மாவட்ட வருவாய் துறை, உள்துறை, சிறப்பு செயல்திட்டங்கள் மற்றும் திட்ட செயலாக்கத் துறை ஆகியவை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும் மகளிர் நலத்துறை, இளைஞர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம் மற்றும் நகர்ப்புற குடிநீர் வழங்கல் துறைகளின் பொறுப்புகளையும் முதலமைச்சர் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புசி ஆனந்த் கிராமப்புற மேம்பாடு மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை சார்ந்த அனைத்து பொறுப்புகளையும் அவர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆதவ் அர்ஜுனா பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்பார். பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு வளர்ச்சித்துறைகள் அவருக்குக் ஒதுக்கப்பட்டுள்ளன.
திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், சுகாதாரம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஏ. செங்கோட்டையன் நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை, ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதிய உதவித்தொகை தொடர்பான துறைகள் அவருக்குக் கீழ் செயல்படும்.
மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட் ரமணன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்பார். உணவுத்துறை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாட்டு துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.டி.ஆர். நிர்மல் குமார், எரிசக்தித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்சாரம், நீதிமன்றங்கள், சிறைத்துறை, ஊழல் ஒழிப்பு, சட்டப்பேரவை மற்றும் ஆளுநர் தேர்தல் தொடர்பான துறைகள் அவரின் பொறுப்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சராக பொறுப்பேற்பார். இதனுடன் தொல்லியல் துறை, திரைப்பட தொழில்நுட்பத் துறை, அச்சகத்துறை மற்றும் அரசு அச்சகம் ஆகிய துறைகளும் அவருக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.
காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே. பிரபு, இயற்கை வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறைகள் அவரின் கட்டுப்பாட்டில் செயல்படும்.
சிவகாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி கீர்த்தனா, தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்பார். தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத்துறை, முதலீட்டு வளர்ச்சி தொடர்பான துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
