Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கொடகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப் (46). இவருக்கு சுமா (40) என்ற மனைவியும், பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் வயதில் குழந்தைகளும் உள்ளனர். ராணுவத்தில் பணியாற்றி வந்த சந்தீப், 2023 டிசம்பர் மாதத்தில் ஓய்வு பெற்று தனது சொந்த ஊருக்கு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 13 ஆம் தேதி சந்தீப் பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கினார். லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதால், அவர் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டாம் என மறுத்துவிட்டார்.

பின்னர் அவரது மனைவி சுமா, அவரை காடப்பிரபா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த சந்தீப்பின் உடல்நிலை, மார்ச் 15 ஆம் தேதி திடீரென மோசமடைந்தது. மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. உடற்கூறாய்வு அறிக்கையிலும் மரணம் இயற்கையானது என குறிப்பிடப்பட்டதால், எந்த சந்தேகமும் இன்றி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு சந்தீப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்க  "லஞ்ச வெறி… நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த அராஜகம்! பதவியைப் பறித்து கம்பி எண்ண வைத்த சிசிடிவி ஆதாரம்!"

ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு, சமூக வலைதளங்களிலும் வாட்ஸ்அப்பிலும் ஒரு வீடியோ வைரலானது. அதில் சந்தீப்பின் நெருங்கிய நண்பரும் கார் ஓட்டுநருமான பண்டலிகா டோம்பர், சந்தீப்பின் மரணம் விபத்தோ அல்லது இயற்கையான மாரடைப்போ அல்ல, அது திட்டமிட்ட கொலை எனக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இதில் சந்தீப்பின் மனைவி சுமாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சந்தீப்பின் பெற்றோரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து, அவர்கள் பெலகாவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறை தனிப்படை விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் முதலில் கார் ஓட்டுநர் டோம்பர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, சுமாவுக்கும் டோம்பருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்ததாகவும், இருவரும் இணைந்து கொலை திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்தது.

சந்தீப் உயிருடன் இருந்தால் தங்களின் உறவுக்கு தடையாக இருப்பார் என கருதிய இருவரும், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். சந்தீப்பின் ஆவணங்களை திருடி, அவரது பெயரில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீட்டு பாலிசிகளை எடுத்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தால் காப்பீட்டு தொகையை பெறலாம் என்பதே அவர்களின் திட்டமாக இருந்தது.

இதையும் படியுங்க  'இந்தி-சீனி பாய் பாய்' வெறும் ஏமாற்று வேலை… அருணாச்சலில் அடித்து ஆடும் சீனா..! அடுத்த துரோகம் அம்பலம்!

இதற்காக, சந்தீப்பின் மதுப் பழக்கத்தை பயன்படுத்தி, அவரது உணவிலும் மதுவிலும் தூக்க மாத்திரைகளை கலந்து அவரை பலவீனப்படுத்தியுள்ளனர். பின்னர் மார்ச் 13 அன்று ஏற்பட்ட சாலை விபத்தை பயன்படுத்தி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு டோம்பரின் உறவினரான ராகுல் ஜோகி என்பவர் பணியாற்றியதை பயன்படுத்தி, சந்தீப்புக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மார்ச் 15 அன்று, அவரது குளுக்கோஸ் பாட்டிலில் விஷம் கலந்து செலுத்தப்பட்டதாகவும், அதனால் 30 நிமிடங்களில் சந்தீப் உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் உடற்கூறாய்வு அரசு மருத்துவமனையில் நடைபெற்றபோது, சுமாவின் தாய் அங்கு சுகாதாரப் பணியாளராக இருந்துள்ளார். அவருடன் இணைந்து சுமா, உண்மையை மறைக்க திட்டமிட்டு, தடய அறிவியல் துறை மூத்த அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், சந்தீப்பின் மரணம் மாரடைப்பு என போலியான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சந்தீப்பின் உடல் எந்த சந்தேகமும் இன்றி அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், காப்பீட்டு பணத்தைப் பெற சுமா முயற்சித்த போது, பணப் பகிர்வு தொடர்பாக சுமா மற்றும் டோம்பருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தன்னை ஏமாற்றி பணத்துடன் சுமா தப்பிச் செல்லலாம் என சந்தேகித்த டோம்பர், வாட்ஸ்அப் வீடியோ மூலம் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்க  வயசு வெறும் நம்பர் தான்! ஊன்றுகோலுடன் 3,550 படிக்கட்டுகளை வென்ற 116 வயது சிங்கப்பெண்!"

இந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் புதைக்கப்பட்ட சந்தீப்பின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்தனர். அதில் விஷம் கலந்ததால் மரணம் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சந்தீப்பின் மனைவி சுமா, கார் ஓட்டுநர் பண்டலிகா டோம்பர், மருத்துவமனை ஊழியர் ராகுல் ஜோகி, லஞ்சம் பெற்ற தடய அறிவியல் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர் பசவராஜ் பஸ்மே உட்பட மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago