Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூர் கிராமத்தில், உயர் மின்னழுத்த மின்கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் விவசாயி ஒருவர் மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்னழுத்த மின்கோபுரம் மற்றும் மின்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக மின்பாதை செல்லும் வழியில் உள்ள மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வி, தனது கணவர் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த நிலையில், தனது மகன் பல் மருத்துவர் பாலமுருகனுடன் இணைந்து இயற்கை முறையில் பல்வகைப் பண்ணையை உருவாக்கி பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

Republic Tamil

தனது கணவரின் நினைவாகவும், சமூக அக்கறையுடனும், செல்வியின் குடும்பத்தினர் தங்களது நிலத்தில் மாமரம், மகோகனி, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து வந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அந்த நிலத்தில் வளர்ந்து, விவசாயக் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கும், அப்பகுதியின் பசுமைக்கும் முக்கிய பங்காற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "கொடைக்கானலில் அப்படி என்னதான் நடக்குது? கொத்து கொத்தாக குவிந்த போலீஸ்.. பதறவைக்கும் பின்னணி!"

இந்த நிலையில், தியாகரங்கம் பகுதியில் உயர் மின்னழுத்த மின்கோபுரம் மற்றும் மின்பாதை அமைப்பதற்காக அதிகாரிகள் செல்வியின் நிலத்தை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, மரங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மின்பாதையை சற்று தள்ளி அமைக்க வேண்டும் என விவசாயி செல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பின்னர் எந்தவித ஒப்புதலும் பெறப்படாமல், உரிய இழப்பீடும் வழங்கப்படாமல், காவல்துறையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் நிலத்தைச் சுற்றிவளைத்து மரங்களை வெட்டும் பணியை மேற்கொண்டதாக செல்வி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, செல்வியையும் அவரது மகன் பாலமுருகனையும் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவர்களின் கண் முன்னேயே நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

மரங்கள் வெட்டப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி, ஓடிச்சென்று ஒரு மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு, “மரத்தை வெட்டாதீங்க சார்… வெட்டாதீங்க…” என கண்ணீர் மல்க கதறி அழுதார்.

பல ஆண்டுகளாக தனது பிள்ளையைப் போல வளர்த்து வந்த மரங்கள் கண் முன்னே வெட்டப்படுவதை தாங்க முடியாமல், அவர் நிலத்தில் விழுந்து அழுது புரண்டதாகவும் கூறப்படுகிறது. மரங்களை காப்பாற்ற அவர் தொடர்ந்து போராடிய நிலையில், காவல்துறையினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்திய காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்க  "ஒரே ஒரு வீடியோ.. களத்தில் குதித்த இந்திய தூதரகம்! குவைத் நரகத்தில் இருந்து மீட்கப்பட்ட கள்ளக்குறிச்சி வனிதா!"

ஒரு கட்டத்தில், மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு அழுத செல்வியை போலீசார் அங்கிருந்து தூக்கி அப்புறப்படுத்தியதாக கூறப்படும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன.

விவசாயிகளின் நிலங்கள் வழியாக உயர்மின்னழுத்த மின்பாதை அமைக்கும் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் மின்சார வாரிய அதிகாரிகள் முன்னிலையில் மரங்கள் வெட்டும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

வெட்டப்பட்ட மரங்களில் பெரும்பாலானவை பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட பயன்தரும் மரங்களாகவும், நிழல் தரும் மரங்களாகவும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும், அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் பசுமைக்கும் ஆதாரமாக இருந்த மரங்கள் ஒரே நாளில் இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்டதே விவசாயி செல்வியின் வேதனைக்கும், அப்பகுதி மக்களின் ஆதங்கத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மரத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு “வெட்டாதீங்க சார்” என கதறிய பெண்ணின் காட்சியை பார்த்த பலரும், 1970-களில் இந்தியாவில் மரங்களை பாதுகாக்க மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து போராடிய புகழ்பெற்ற சிப்கோ இயக்கத்தை நினைவுபடுத்துவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க  "நீதிபதிக்கே தெரியாமல்.. கோர்ட்டுக்குள் நடந்த ₹38 லட்சம் பகீர் மோசடி! பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை!"
Republic Tamil

அபிவிருத்தித் திட்டங்கள் அவசியமானவை என்றாலும், அவற்றுக்காக இயற்கையையும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் மரங்களையும் அழிப்பதை தவிர்க்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மின்பாதையின் வழித்தடத்தை சற்று மாற்றி அமைப்பது அல்லது சாத்தியமான இடங்களில் மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடங்களில் மறுநடவு செய்வது போன்ற மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, இதுபோன்ற திட்டங்களின்போது மரங்களை வெட்டுவதற்கு பதிலாக, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரங்களை வேரோடு பிடுங்கி மாற்று இடங்களில் மறுநடவு செய்யும் ‘ட்ரீ டிரான்ஸ்பிளான்டேஷன்’ முறையை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும், சாத்தியமான இடங்களில் அதனை கட்டாயப்படுத்த வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளர்ச்சி திட்டங்கள் தேவை என்றாலும், இயற்கை வளங்களையும், விவசாயிகளின் உணர்வுகளையும் பாதுகாப்பது அதே அளவு முக்கியம் என்ற விவாதத்தை கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago