Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தில், குதிரை மேய்ப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவி வந்த எல்லைத் தகராறு கொலைச் சம்பவமாக மாறியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பூம்பாறை மேல்மலைப் பகுதியில் வசித்து வந்த ராமர் என்பவர், நேற்று இரவு நடைபெற்ற தாக்குதலில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் பிரசாந்த் (24) என்ற இளைஞர் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆரம்பத்தில் வெளியான தகவல்களில், விவசாயி ரகு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், ரகு என்பவர்தான் ராமர் மற்றும் பிரசாந்தை அரிவாளால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

காவல்துறையினரின் தகவலின்படி, கடந்த சில மாதங்களாக குதிரை மேய்ப்பது தொடர்பாக ரகுவுக்கும் ராமருக்கும் இடையே எல்லைத் தகராறு இருந்து வந்துள்ளது. பலமுறை வாய்த்தகராறாக நீடித்த இந்த பிரச்சினை, சம்பவத்தன்று மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது வன்முறையாக மாறியுள்ளது. அப்போது ரகு அரிவாளால் தாக்கியதில் ராமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரசாந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்க  "காணாமல் போகும் மலைகளின் இளவரசி!  இயற்கை விடுத்த இறுதி எச்சரிக்கை: அழிவின் விளிம்பில் கொடைக்கானல்!

தாக்குதல் நடத்திய ரகு, சம்பவத்திற்குப் பிறகு நேற்று நள்ளிரவே காவல் நிலையத்தில் சரணடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த ராமரும், குற்றம் சாட்டப்பட்ட ரகுவும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தச் சம்பவம் பூம்பாறை கிராமத்தில் கடும் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ரகு தனியாக இந்தக் கொலையைச் செய்திருக்க முடியாது என்றும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, ராமரின் உறவினர்கள் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூம்பாறையிலிருந்து மன்னவனூர் உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் முக்கிய மலைச் சாலையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

நேற்று நள்ளிரவில் ஆத்திரமடைந்த சிலர், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கிராமம் முழுவதும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.

இதையும் படியுங்க  100 வருஷமா யாருக்கும் தெரியாத சபாநாயகர் நாற்காலியின் ரகசியம்! உள்ளே இருக்கும் அந்த மர்ம அறை?

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் கொடைக்கானல் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின்போது, உயிரிழந்த ராமரின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், அதில் ரூ.10 லட்சம் அவரது வங்கிக் கணக்கில் திங்கட்கிழமை செலுத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், ராமரின் மனைவிக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இருப்பினும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், தங்களது சமூக மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க, பூம்பாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலைமையை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க  சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கம்... உள்ளூர் மக்களுக்கு நரகம்! குடிநீரின்றி தவிக்கும் கொடைக்கானல்!

இந்தக் கொலைச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் காரணமாக, கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகள் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago