Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் தீவிரமான ‘எல் நினோ’ (El Niño) மற்றும் அது ‘சூப்பர் எல் நினோ’ (Super El Niño) ஆக வலுப்பெறும் சாத்தியம் காரணமாக உலக நாடுகள் கடுமையான பருவநிலை பாதிப்புகளை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக பெரு நாட்டில் 40 சதவீத மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட அசாதாரணமாக அதிகரிப்பதே எல் நினோ எனப்படும் பருவநிலை நிகழ்வாகும். இது உலகளாவிய வானிலை அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, பல நாடுகளில் வறட்சி, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற தீவிர பாதிப்புகளை உருவாக்குகிறது.

இந்நிலையில், எல் நினோவின் தாக்கத்தால் அதி கனமழை மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், பெரு நாட்டின் மொத்த மாவட்டங்களில் சுமார் 40 சதவீதம், அதாவது 796 மாவட்டங்களில், அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அவசரநிலை உத்தரவு 60 நாட்கள் அமலில் இருக்கும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள இந்த நடவடிக்கை உதவும் என்றும் பெரு அரசு தெரிவித்துள்ளது.

எல் நினோ பருவநிலை மாற்றம் இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இயற்கையாக நிகழும் நிகழ்வாகும். இதன் தாக்கத்தால் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிக கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.

இதற்கிடையில், உலக வானிலை அமைப்பு மற்றும் பருவநிலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போதைய எல் நினோ வரும் மாதங்களில் ‘சூப்பர் எல் நினோ’ ஆக வலுப்பெறக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் உலகின் பல நாடுகளில் வரலாறு காணாத இயற்கை பேரிடர்கள், கடும் வறட்சி, அதி கனமழை மற்றும் பெருவெள்ளம் போன்ற தீவிர பருவநிலை பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago