மதுரை மாவட்டம் சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் திருமண மண்டப கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்த விபத்தில் மண்ணில் புதைந்த இரண்டு பெண் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
புளியங்குளம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் அடித்தளத்திற்காக சுமார் 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, பில்லர் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டது.
இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தமிழரசி மற்றும் தனலட்சுமி ஆகிய இரண்டு பெண் தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சிலைமான் காவல்துறையினரின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, மண்ணில் புதைந்திருந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன.
பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதல் கட்ட விசாரணையில், கட்டுமான பணியின் போது முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை என்றும், மண் சரிவை தடுக்கும் பாதுகாப்புச் சுவர் அமைக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த தமிழரசி மற்றும் தனலட்சுமி இருவரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்தியதாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
