Gingee

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏற்கெனவே 7 வயது சிறுமி மாயமான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அதே பகுதியில் மற்றொரு 7 வயது சிறுமியை மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி, செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் தனது தாயாருடன் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா அதிகாலையில் மர்மமான முறையில் மாயமானார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. சிறுமி மாயமாகி 30 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அவரைக் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் மற்றொரு அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஆஷிகா, அங்குள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று திங்கட்கிழமை இரவு சுமார் 7 மணியளவில், வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடைக்குச் சென்றுவிட்டு அவர் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார்.

இதையும் படியுங்க   ”எவரெஸ்ட் சீரகத்தூள் தடை! சமையலறையில் ஒளிந்திருக்கும் பெரிய ஆபத்து.. உங்க வீட்லயும் இந்த Batch பாக்கெட் இருக்கா?மக்களே உஷார்!

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று சிறுமியின் அருகே நின்றுள்ளது. அதில் இருந்த மர்ம நபர்கள், சிறுமியிடம், “நில்லு… ஆட்டோவுக்குள் வா” என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக உள்ளே இழுக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு சத்தமிட்டு அலறியுள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி பொதுமக்களும் பெற்றோரும் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்துள்ளனர். இதைக் கண்ட மர்ம நபர்கள், சிறுமியை விட்டுவிட்டு ஆட்டோவில் வேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனால் சிறுமி கடத்தப்படாமல் தப்பியுள்ளார்.

இதுகுறித்து சிறுமி காவல்துறையினரிடமும் ஊடகங்களிடமும் பேசுகையில், “நான் கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் என்னிடம் ‘நில்லு… உள்ளே வா’ என்று கூறி ஆட்டோவுக்குள் இழுக்க முயன்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஹேமலதா என்ற சிறுமி மாயமாகி 30 நாட்களுக்கும் மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது அதே பகுதியில் மற்றொரு சிறுமியைக் கடத்த முயன்ற சம்பவம் கிராம மக்களிடையே கடும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து சிறுமிகள் குறிவைக்கப்படுவதாக எழுந்துள்ள அச்சத்தால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்க  "29% வாட் வரியால் முடங்கும் சென்னை விமான சேவை! நிர்வாகத்தை மாற்றக் கோரிய முதல்வர்... வரியை தூக்கிக்காட்டிய AAI!"

இந்தச் சம்பவம் தொடர்பாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியைக் கடத்த முயன்ற மர்ம நபர்களையும், அவர்கள் வந்த ஆட்டோவையும் அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயங்கொண்டான் கிராமம் மற்றும் செஞ்சி நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். தப்பியோடிய ஆட்டோவையும் மர்ம நபர்களையும் பிடிக்கத் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, ஜெயங்கொண்டான் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அங்கு வரும் குடிமகன்களால் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுவதுடன், அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று சிறுமியின் பெற்றோரும் கிராம மக்களும் காவல்துறை மற்றும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக மாயமான ஹேமலதாவை மீட்க சிபிசிஐடி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், உளவுத்துறை உள்ளிட்ட பிரிவுகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படியுங்க  "செஞ்சி சிறுமி ஹேமலதாவுக்கு என்னாச்சு?.. நள்ளிரவில் பேசிய அந்த 2 மொபைல் எண்கள் யாருடையது?.

இந்த வழக்கில் காவல்துறையினர் 600-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததுடன், 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்கெனவே ஒரு சிறுமி மாயமான வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், தற்போது மற்றொரு சிறுமியைக் கடத்த முயன்ற சம்பவம் செஞ்சி சுற்றுவட்டார மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளதுடன், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், மாயமான ஹேமலதாவை விரைவில் மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *